புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸில் 121 உயிர்கள் பலியான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் 11 குற்றவாளிகளில் அக்கூட்டத்தை நடத்திய போலே பாபா பெயர் இடம்பெறவில்லை.
உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்ட சிக்கந்தராராவின் முகல்கடி கிராமம் உள்ளது. இங்கு சத்ஸங் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா, தன் ஆன்மிகக் கூட்டத்தை கூட்டியிருந்தார்.
80,000 பேர் வருவதாகக் கூறப்பட்ட கூட்டத்திற்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் வந்தனர். கடந்த வருடம் ஜுலை 2-ல் நடந்த இக்கூட்டத்தின் முடிவில் முதல் நபராக பாபா வெளியேறி இருந்தார். அப்போது பாபாவிடம் ஆசிபெறவும், அவரது காலடி தடம் பதித்த மண் எடுக்கவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதின. இவர்களை பாபாவின் தனிக்காவலர்கள் தள்ளிவிட்டதாகப் புகார் எழுந்தது. இதனால், உருவான நெரிசலால் மூச்சுத்திணறி, 112 பெண்கள் உள்ளிட்ட 121 உயிர்கள் பலியாகின. சுமார் 250 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து வழக்கில், உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பிரஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் உபி அரசு ஒரு நீதி விசாரணை ஆணையம் அமைத்தது. ஓய்வுபெற்ற ஐபிஎஸ் பவேஷ் குமார் சிங் மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் ஹேமந்த் ராவ் ஆகியோர் அதில் உறுப்பினர்கள்.
இந்த ஆணையம் தனது அறிக்கையில் உபி காவல்துறை விசாரணை சரியானது என்று கண்டறிந்துள்ளது. கூட்டத்தை நடத்திய சூரஜ்பால் என்கிற போலே பாபா மீது எந்த தவறும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதனுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க பல முக்கியமான பரிந்துரைகளையும் அது வழங்கியுள்ளது.
முன்னதாக முதல் தகவல் அறிக்கையில், போலே பாபாவின் பெயர் இல்லை என்றாலும் அவர் தப்ப முடியாது என விசாரணையின் போது உபி காவல்துறை கூறி வந்தது.
தற்போது இந்த வழக்கில் 3200 பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கலாகி உள்ளது. இதில் இடம்பெற்ற 2 பெண் உள்ளிட்ட 11 குற்றவாளிகளில் போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்ல. இதில் 676 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 6 ஆம் தேதி கூடுதல் அமர்வு நீதிபதி நீதிமன்றம் எண் 1, பிரதிவாதியின் விடுதலை மனுவை நிராகரித்தது. குற்றச்சாட்டுகள் குறித்த சாட்சியங்களை வழங்க ஆகஸ்ட் 18 ஆம் தேதி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிமன்றம் நீதிபதி மகேந்திர ஸ்ரீவஸ்தவா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிமன்றம், குற்றச்சாட்டுக்களில் இருந்து குற்றவாளிகளின் விடுவிப்பு மனுவை நிராகரித்தது.
இந்த வழக்கின் விசாரணை இனி தொடர்ந்து நடைபெற உள்ளது இவ்வழக்கின் 11 குற்றவாளிகளுக்கும் ஏற்கெனவே ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
போலே பாபா யார்? நெரிசல் சம்பவத்திற்கு காரணமாகக் கூறப்படும் போலே பாபாவின் இயற்பெயர், சூரஜ் பால். ஹாத்ரஸுக்கு அருகிலுள்ள காஸ்கன்ச் மாவட்டத்தின் பட்யாலி கிராமத்தை சேர்ந்தவர்.
கடந்த 18 வருடங்களுக்கு முன் உபியின் காவல்துறையில் சாதாரணக் கான்ஸ்டபிளாக இருந்தவர். உபியின் உளவுத்துறையிலும் சூரஜ் பால் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், உபியின் தலித் சமூகத்தை சேர்ந்தவரான போலே பாபா மீது எடுக்கும் நடவடிக்கையால் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு கிடைக்காது எனக் கருதப்படுகிறது.இதனால் அவர் இவ்வழக்கிலிருந்து தப்ப விடப்பட்டிருப்பதாகவும் எதிர்கட்சிகள் புகார் கூறினர்.
இதன் மீது உபியின் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வரான மாயவதியும் கருத்து கூறி இருந்தார். அதில், ’போலே பாபாவின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லாதது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை. குற்றத்திற்கு காரணமான இவரை உபி அரசு தப்ப வைக்க முயல்கிறது.’ என மாயாவதிகுறிப்பிட்டிருந்தார்.