மும்பை: ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம். அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி மருந்தியல் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்த ஆயுர்வேத, சித்த, ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம், அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டில் சிசிஎம்பி என்ற மருந்தியல் படிப்பு தொடங்கப்பட்டது.
இந்த சூழலில் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சில் கடந்த ஜூன் 30-ம் தேதி ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில், “நவீன மருந்தியல் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்ற ஹோமியோபதி மருத்துவர்கள் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சிலில் முறைப்படி பதிவு செய்யலாம். அதன்பிறகு அவர்கள் அலோபதி சிகிச்சை அளிக்கலாம். அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம்’’ என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிர அரசின் முடிவை ஹோமியோபதி மருத்துவர்கள் வரவேற்று உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “பல்வேறு எம்பிபிஎஸ் மருத்துவர்கள், தங்கள் நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர். நாங்கள் முறையாக மருந்தியல் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்துள்ளோம். எங்கள் நோயாளிகளுக்கு தேவையான அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்ய எங்களுக்கு உரிமை இருக்கிறது. மகாராஷ்டிர அரசின் முடிவை முழுமனதோடு வரவேற்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.
ஆனால் மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐஎம்ஏ) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர ஐஎம்ஏ தலைவர் சந்தோஷ் கூறும்போது, “மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவர்கள், பல்வேறு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளை நடத்துகின்றனர். அவர்களின் அழுத்தத்தால் மகாராஷ்டிர அரசு புதிய அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. இந்த அரசாணையை எதிர்த்து சட்டரீதியாக போராடுவோம்’’ என்று தெரிவித்தார்.