திருவனந்தபுரம்: இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான எப்-35பி போர் விமானம் ஹைட்ராலிக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14-ம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து அதனை சரிசெய்ய இங்கிலாந்து ராயல் விமானப் படையைச் சேர்ந்த 25 பொறியாளர் சிறப்பு உபகரணங்களுடன் அட்லஸ் விமானத்தில் கிளம்பி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் விமானத்தின் ஹைட்ராலிக் குறைபாடு பொறியாளர்களால் நிவர்த்தி செய்யப்பட்டது. இதையடுத்து, 37 நாட்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் படையினரின் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து எப்-35பி போர் விமானம் நேற்று காலை 10.15 மணிக்கு கிளம்பி வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வினை நோக்கி பறந்தது.
இந்த விமானம் போர் போன்ற அவசர காலத்தின்போது வேகமாக புறப்படவும், செங்குத்தாக தரையிறங்கவும் கூடியது.
போர் விமானத்தை பழுதுபார்க்கும் பணிக்கு இந்தியா தொடர்ச்சியான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கியதற்கு இங்கிலாந்து அரசு நன்றி தெரிவித்துக் கொண்டது.
பிரிட்டிஷ் போர் விமானத்தை கடந்த 37 நாட்களாக நிறுத்தி வைத்ததற்காக ரூ.5 லட்சம் பார்க்கிங் கட்டணத்தை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் வசூலித்துள்ளது. அனைத்து வசதிகளையும் வழங்கியற்காக விமான நிலைய பணியாளர்களுக்கு இங்கிலாந்து விமானி நன்றி தெரிவித்தார்.