லக்னோ: செப்டம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை ‘ஹெல்மெட் இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்ற மாநில அளவிலான சாலைப் பாதுகாப்பு பிரச்சாரம் நடைபெறும் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச அரசு ‘ஹெல்மெட் இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்ற புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம், பெட்ரோல் நிலையங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, எரிபொருள் நிரப்பப்படாது.
மாவட்ட ஆட்சியர்கள் சாலைப் பாதுகாப்புக் குழுக்களுடன் இணைந்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக காவல்துறை, போக்குவரத்து, வருவாய் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இந்த பிரச்சாரத்தில் கூட்டாகச் செயல்படுவார்கள் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உ.பி அரசு சார்பில் வெளியான அறிவிப்பில், ‘இந்த முயற்சி சட்டபூர்வமானது. 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 129, இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்புறம் அமர்ந்துள்ள பயணிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம். அதே நேரத்தில் பிரிவு 194டி விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கிறது.
‘ஹெல்மெட் இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்பதன் நோக்கம் தண்டனை அளிப்பது அல்ல, மாறாக வாகன ஓட்டிகளை சட்டத்தின்படி பாதுகாப்பான நடத்தையை மேற்கொள்ள ஊக்குவிப்பதாகும். இனி ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே வாகன ஓட்டிகளால் எரிபொருள் பெறமுடியும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய உத்தரபிரதேச போக்குவரத்து ஆணையர் பிரஜேஷ் நாராயண் சிங், “இந்த பிரச்சாரம் செப்டம்பர் 1 முதல் 30 வரை பல அரசுத் துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முயற்சியாக நடைபெறும். ’முதலில் தலைக்கவசம், பின்னர் எரிபொருள்’ என்பதை ஒரு விதியாக ஆக்குங்கள், ஏனெனில் தலைக்கவசம் அணிவது உயிரைக் காப்பாற்றுவதற்கான எளிய காப்பீடு” என்று கூறினார்.