புதுடெல்லி: ஹவுதி கிளர்ச்சியாளர் தாக்குதலின்போது பிலிப்பைன்ஸ் நாட்டினரை மீட்பதில் முதலில் களமிறங்கியது இந்தியாதான் என்றும், அதை தங்கள் நாடு அங்கீகரிப்பதாகவும் அந்நாட்டின் அதிபர் ஃபெர்னாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்னாண்ட் மார்கோஸ் ஜூனியர், பிரதமர் நரேந்திர மோடியை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ஃபெர்னாண்ட் மார்கோஸ் ஜூனியர், “கடந்த 2024-ல் ஹவுதி கிளர்ச்சியாளர் தாக்குதலில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டினரை மீட்பதில் முதலில் களமிறங்கிய நாடு இந்தியா. அதற்காக இந்திய அரசுக்கும் இந்திய கடற்படைக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இந்தியாவுக்கு இருக்கும் செல்வாக்கை பிலிப்பைன்ஸ் அங்கீகரிக்கிறது. மேலும், இந்தோ – பசுபிக் பிராந்தியம் அச்சுறுத்தல் அற்றதாக இருப்பதை உறுதிப்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியர்கள் விசா இன்றி பிலிப்பைன்ஸ் வருவதற்கான சலுகைகளை நாங்கள் அறிவிக்கிறோம். இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பிலிப்பைன்ஸ் வருமாறு அழைப்பு விடுக்கிறேன். பிலிப்பைன்ஸ் நாட்டினர், விசா இன்றி இந்தியா வருவதற்கான சலுகையை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு அக்டோபர் முதல் நேரடி விமானச் சேவை தொடங்கப்பட உள்ளது. இதை வரவேற்பதோடு, விமான சேவையை விரிவுபடுத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே தூதரக ரீதியிலான உறவு என்பது முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு புதிய சகாப்தத்தில் நுழைகிறது. பிலிப்பைன்ஸைப் பொறுத்தவரை இது ஒரு முக்கியமான முடிவு. ஏனெனில், இதுபோன்ற கூட்டாண்மை உறவை ஏற்படுத்திக்கொள்வதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். இந்தியா, பிலிப்பைன்ஸின் 5-வது கூட்டாண்மை நாடாக மாறுகிறது.
இரு நாடுகளுக்கு இடையேயான 75 ஆண்டுகால உறவின் விரைவான, ஆழமான வளர்ச்சி இரு பொருளாதாரங்களுக்கும் மிகப் பெரிய பலன்களை அளிக்கும். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.