புதுடெல்லி: ஹரியானா, கோவா ஆகிய மாநிலங்களுக்கான ஆளுநர்களையும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கான துணைநிலை ஆளுநரையும் நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹரியானா மாநில ஆளுநராக அஷிம் குமார் கோஷ், கோவா மாநில ஆளுநராக பசுபதி அஷோக் கஜபதி ராஜு ஆகியோர் நியமிக்கப்பட்டுளளனர். லடாக் துணைநிலை ஆளுநர் பிரிகேடியர் பி.டி. மிஸ்ராவின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. லடாக்கின் புதிய துணைநிலை ஆளுநராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட நியமனங்கள், அவர்கள் பொறுப்பேற்கும் தேதிகளில் இருந்து நடைமுறைக்கு வரும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பசுபதி அஷோக் கஜபதி ராஜு, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர்.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும், அரசியலமைப்பு பாதுகாப்புகளை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இந்த முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.