புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மறைவை அடுத்து மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான ஷிபு சோரன், சிறுநீரக பிரச்சினை காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லியில் உள்ள ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்தது.
81 வயதான ஷிபு சோரன், ஜார்க்கண்ட் பழங்குடி அரசியலின் முகமாக அறியப்படுபவர். மாநில அளவிலும் தேசிய அளவிலும் அரசு பொறுப்புகளை வகித்தவர். பழங்குடி மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டவர்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியதும், துணைத் தலைவர் ஷரிவன்ஷ் ஷிபு சோரனின் மறைவை அவைக்கு அறிவித்தார். இதையடுத்து அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக ஹரிவன்ஷ் அறிவித்தார்.
தலைவர்கள் இரங்கல்: ஷிபு சோரனின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, ஜெயராம் ரமேஷ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை 3 நாட்கள் அரசுமுறை துக்கம் அநுசரிக்கப்படும் என்று ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.
மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு: மக்களவை இன்று காலை 11 மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பிஹார் மாநில வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி அவர்கள் கூச்சலிட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்த சபாநாயகர் ஓம் பிர்லா முயன்றார். இதுபோன்று அமளியில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றும் அமளியில் ஈடுபடுவதை நிறுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தார்.