புதுடெல்லி: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகிய 6 எம்பிக்களின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
அவர்களுக்கு மாநிலங்களவையில் நேற்று வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடைசி நாளில் அன்புமணி மட்டும் அவைக்கு செல்லவில்லை. ஓய்வு பெறும் எம்பிக்கள் குறித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் கூறியதாவது:
அனல் பறக்கும் பேச்சால் அனைவரையும் ஈர்த்த வைகோ ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 1978, 1984, 1990 என 3 முறை இந்த அவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், கடந்த 2019-ம் ஆண்டில் மீண்டும் மாநிலங்களவை எம்பியானார். இந்த அவைக்கு அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளார். வைகோ உட்பட 6 எம்பிக்களும் மாநிலங்களவைக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கி உள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறும்போது, “ஓய்வு பெறும் 6 எம்பிக்களும் ஜனநாயகத்தை வலுப்படுத்த தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கினர்” என்று புகழாரம் சூட்டினார்.
பதவி நிறைவடைந்த 6 எம்பிக்களில் திமுகவை சேர்ந்த வில்சன் மீண்டும் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்து திமுகவை சேர்ந்த கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்பிக்களும் மாநிலங்களவையில் இன்று பதவியேற்க உள்ளனர்.