புதுடெல்லி: ‘‘வேளாண் சட்டங்கள் தொடர்பாக என் தந்தை அருண் ஜெட்லி மிரட்டியதாக ராகுல் காந்தி கூறுவது தரமற்ற சிந்தனை’’ என்று ரோஹன் ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் சட்டப் பிரிவு ஆண்டு மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்த போது, அவற்றை நான் கடுமையாக எதிர்த்தேன். அப்போது நடந்த சம்பவம் எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி என்னை மிரட்டினார். வேளாண் சட்டங்களை தொடர்ந்து எதிர்த்தாலோ, மத்திய அரசை எதிர்த்து பேசினாலோ, என் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அருண் ஜெட்லி மிரட்டினார்.
அதற்கு, ‘‘நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் காங்கிரஸ்காரர்கள். கோழைகள் அல்ல. நாங்கள் வளைந்து கொடுக்க மாட்டோம். பிரிட்டிஷ்காரர்களாலேயே எங்களை வளைய வைக்க முடியவில்லை’’ என்று பதில் அளித்தேன். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இதற்கு அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து ரோஹன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இறந்த எனது தந்தை அருண் ஜெட்லியின் நினைவுகளை அரசியலாக்க நினைக்கிறார் ராகுல் காந்தி. என் தந்தை ராகுலை மிரட்டியதாக கூறுகிறார். அவருக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். என் தந்தை அருண் ஜெட்லி இறந்தது 2019-ம் ஆண்டு.
ஆனால், வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது 2020-ம் ஆண்டு. இந்த உண்மை கூட தெரியாமல், தவறான கருத்துகளை கூறுகிறார் ராகுல் காந்தி. அவர் கூறிய கருத்துகள் அனைத்தும் பொய், தரமற்ற பேச்சு. என் தந்தை யாரையும் மிரட்டும் குணம் கொண்டவரில்லை. எந்த சூழ்நிலையிலும் ஜனநாயக முறைப்படி செயல்பட்டவர். ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்பதில் அவர் முழு நம்பிக்கை கொண்டவர்.
அரசியலில் எப்போதெல்லாம் சர்ச்சைகள் எழுந்தனவோ, அப்போதெல்லாம் அவர் விவாதத்துக்கு முக்கியத்துவம் அளித்தார். பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தீர்வு காண நினைத்தார். ஏற்கெனவே, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரின் கடைசி காலத்தில் அவரைப் பற்றி தவறான கருத்துகளை கூறி அரசியலாக்கினார் ராகுல் காந்தி. இறந்து போன அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். எனவே, பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இறந்த போன தலைவர்களைப் பற்றி பேசும் போது ராகுல் காந்தி எச்சரிக்கையாக பேச வேண்டும். நம்முடன் தற்போது இல்லாதவர்களைப் பற்றி பேசும் போது ராகுல் காந்தி நாகரிகமாக பேசினால் நான் வரவேற்பேன். இவ்வாறு ரோஹன் ஜெட்லி கூறினார்.