புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரராக இருப்பவர் பிஸ்டல் சலீம். டெல்லியின் ஜாப்ராபாத்தை சேர்ந்த இவரை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் 26 வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 800 தோட்டாக்களுடன் டெல்லி போலீஸார் பிடித்தனர். ஆனால் சிறையிலிருந்து ஜாமீன் பெற்றவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
பிறகு வெளிநாடுகளில் இருந்தவாறு இந்தியாவுக்கு ஆயுதங்களை கடத்தி, டெல்லி, உ.பி., மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் சமூகவிரோதக் கும்பல்களுக்கு விற்பனை செய்துள்ளார். இவர் நேபாள எல்லையில் மறைந்திருப்பதாக டெல்லி போலீஸாருக்கு சில நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தேடலில் இறங்கிய டெல்லி போலீஸார் சலீமை கைது செய்து, நேற்று டெல்லி அழைத்து வந்துள்ளனர்.
பிஸ்டல் சலீம் துருக்கியில் தயாரிக்கப்பட்ட பல முக்கிய அம்சங்களை கொண்ட ஜிகானா பிஸ்டல்களை இந்தியாவுக்கு கடத்திய முதல் நபர் ஆவார்.
உ.பி.யின் அலிகருக்கு அருகில் உள்ள குர்ஜாவை சேர்ந்த ரிஸ்வான், குர்பான் என்ற இரண்டு சகோதரர்கள் சலீமுக்கு உதவி வந்துள்ளனர். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன், இந்த மூவரும் நேபாளம் வழியாக ஜிகானா பிஸ்டல்களை இந்தியா கொண்டு வந்தனர். பிறகு இந்த பிஸ்டல், சமூகவிரோத கும்பல்களின் முதல் தேர்வாக மாறியது.
காரணம், இந்த பிஸ்டலால் ஒரே நேரத்தில் 15 தோட்டாக்களை சுட முடியும். ஒரு கிலோவுக்கும் குறைவான எடையில் இருக்கும். வெறும் 9 எம்.எம். தோட்டக்கள் இதில் பயன்படுத்தப்படும்.
ஜிகானா பிஸ்டல்கள் பாகிஸ்தான், நேபாளம் வழியாக இந்தியாவுக்கு கடத்தப்படுகின்றன. நேபாளத்தில் இதன் பாகங்கள் பிரிக்கப்பட்டு வாகனங்களில் மறைத்து இந்தியாவுக்கு கடத்தி வரப்படுகின்றன. பிறகு இதன் பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் வரும் பிஸ்டலின் விலை சுமார் ரூ.4 லட்சமாகும். அதே நேரத்தில் நேபாளத்தில் இருந்து வரும் பிஸ்டலின் விலை ரூ.6 லட்சம் வரை இருக்கும்.
ஹாஷிம் பாபா, லாரன்ஸ் பிஷ்னோய், சோனு மோட்டா உள்ளிட்ட நாட்டின் பெரிய தாதா கும்பல்கள் சலீமிடமிருந்து ஆயுதங்களை வாங்கி தங்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றன. பாலிவுட்டில் பாபா சித்திக்கீ, பஞ்சாபி பாடகர் மூஸேவாலா, உ.பி.யின் அத்தீக் அகமது, அவரது சகோதரர் உள்ளிட்ட முக்கிய பலரின் கொலைகளில் ஜிகானா பிஸ்டல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இனி பிஸ்டல் சலீமிடம் நடத்தும் விசாரணையில் வட மாநிலங்களின் பல முக்கிய கொலை வழக்குகளில் துப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.