புதுடெல்லி: ஏரோஸ்பேஸ் பவர் என்ற தலைப்பிலான கருத்தரங்கு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான், இந்திய விமானப்படை துணைத் தளபதி நம்தேஸ்வர் திவாரி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
ஜெனரல் அனில் சவுகான் பேசுகையில், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதால், நாம் ஆண்டு முழுவதும் போருக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்றார்.
விமானப்படை துணை தளபதி திவாரி பேசுகையில், “ஆபரேஷன் சிந்தூரில் நாம் செய்ததை விட சிறந்த உதாரணம் வேறு எதுவும் இருக்க முடியாது. வெறும் 50-க்கும் குறைவான வான்வழி ஆயுதங்களை மட்டுமே நாம் பயன்படுத்தினோம். இது நமது எதிரி நாட்டை சண்டை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்தது. இந்த உதாரணம் குறித்து அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.