பாட்னா: வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பிஹார் மாநிலத்தில் வீடுகளில் 125 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்கு மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கு ஆட்சியில் உள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“எல்லோருக்கும் மலிவான விலையில் மின்சாரம் வழங்கி வருகிறது எனது தலைமையிலான அரசு. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள வீட்டு பயன்பாட்டுக்கான மின் சேவையை பெற்று வரும் மக்கள், 125 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 1.67 கோடி குடும்பங்கள் பயன்பெறும். இது ஜூலை மாத பயன்பாட்டில் இருந்தே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் மக்களின் ஒப்புதலுடன் சூரிய ஒளி மின்சார அமைப்பினை வீட்டின் மேற்கூரை அல்லது அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் பொருத்தப்படும். குதிர் ஜோதி திட்டத்தின் கீழ் இது செயல்படும். எளிய பின்னணி கொண்ட குடும்பங்களுக்கு மட்டும் இந்த திட்டத்தின் கீழ் இதற்கான முழு தொகையையும் மாநில அரசு ஏற்கும். மற்றவர்களுக்கு அரசின் ஆதரவு இருக்கும்” என நிதிஷ் குமார் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.