புதுடெல்லி: ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் என்பதை இந்தியா விரும்புகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஜெர்மனி வெளியறவு அமைச்சர் ஜோஹன் வதேபுல் உடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்திய ஜெய்சங்கர், பின்னர் அவருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெய்சங்கர் கூறியதாவது: காலநிலை மாற்றம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வதேபுல் உடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இந்தியா உடனான வர்த்தகத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற ஜெர்மனியின் நோக்கத்தை நாங்கள் பாராட்டுகிறோம். மேலும், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ததற்காகவும் நாங்கள் பாராட்டுகிறோம். இந்தியா உடன் செமிகண்டக்டர் துறையில் ஒத்துழைக்க விரும்பும் ஜெர்மனியின் ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம். பசுமை ஹைட்ரஜன் துறையிலும் ஒத்துழைப்பை மேற்கொள்வது தொடர்பாக இரு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன.
உலக பொருளாதாரத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களைக் காண்கிறோம். அவை, இந்தியாவும் ஜெர்மனியும், இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயல்படுவதற்கான தேவையை அதிகரிக்கின்றன. இந்தியா – ஜெர்மனி இடையேயான உறவு மிகவும் ஆழமானது, விரைவான வளர்ச்சிக்கு கணிசமான சாத்தியக்கூறுகள் உள்ள உறவு. இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட ஜெர்மனி முழு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அமைச்சர் ஜோஹன் வதேபுல் எனக்கு உறுதியளித்துள்ளார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஜோஹன் வதேபுல் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது விருப்பத்தையும் நம்பிக்கையையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். வரும் நாட்களில் ஒரு தீர்க்கமான முடிவை நோக்கி இது நகர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது பரஸ்பர நலனுக்கு ஏற்றதாக இருக்கும். உலகப் பொருளாதாரத்தை நிலைப்படுத்த இது அவசியம். இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.