புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கான காரணத்தை அறிய விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராம்மோகன் நாயுடு, “அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு இடையே அரசாங்கம் எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை. உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் இழப்பீடு ஒரே மாதிரியாகவே உள்ளது. விமானத்தில் பயணித்த பயணிகள், பணியாளர்கள், மருத்துவக் கல்லூரியில் கொல்லப்பட்ட மாணவர்கள் என அனைவருக்கும் இழப்பீடு ஒன்றுதான்.
விமான விபத்துக்கான உறுதியான காரணம், மீண்டும் இதுபோல நிகழாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் இறுதி அறிக்கையில் இருக்கும். இந்த அவைக்கும் நாட்டு மக்களுக்கும் நான் ஒரு விஷயத்தை சொல்ல முடியும். விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஏஏஐபி வெளிப்படையாகவும், பாரபட்சமற்ற முறையிலும், உண்மையைக் கண்டறியும் நோக்கிலும் விசாரணையை நடத்தி வருகிறது.
தற்போதைய நிலையில் பல கேள்விகள் இருக்கலாம். இந்திய ஊடகங்கள் மட்டுமல்ல மேற்கத்திய ஊடகங்களும் விபத்துக்கான காரணமாக தங்கள் சொந்த கருத்துக்களை, கதைகளை, கண்ணோட்டங்களை தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறு பல கட்டுரைகள் வெளியாகி உள்ளதை நான் பார்த்திருக்கிறேன்.
நாங்கள் எதன் வழியாகவும் இல்லாமல், உண்மையின் வழியாகவே இந்த சம்பவத்தைப் பார்க்க விரும்புகிறோம். நாங்கள் உண்மையின் பக்கம் நிற்க விரும்புகிறோம். விமானிகளுக்கு என்ன நடக்கிறது, போயிங் விமான நிறுவனத்துக்கு என்ன நடக்கிறது, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு என்ன நடக்கிறது அல்லது மற்ற தொடர்புடையவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதல்ல எங்கள் பார்வை.
உண்மையின் பக்கம் நின்று சரியாக என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க விரும்புகிறோம். இறுதி அறிக்கை வெளியான பின்னரே உண்மை என்ன என்பது தெரிய வரும். விசாரணை செயல்முறையை நாம் மதிக்க வேண்டும். விசாரணை செயல்முறை நடந்து முடிந்தவுடன், அது எப்படி நடந்தது, திருத்த நடவடிக்கைகள் உள்ளதா என்பது குறித்தெல்லாம் நாம் பின்னர் பேசலாம். எவ்வித அலட்சியத்துக்கும் இடமில்லாமல், ஐசிஏஓ சர்வதேச வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி விசாரணையை நாங்கள் நடத்தி வருகிறோம்.” என தெரிவித்துள்ளார்.