கொல்கத்தா: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான விபத்தில் விமானப் பணிப் பெண்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரைச் சேர்ந்த குகி மற்றும் மைதேயி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 10 பணிப்பெண்கள் இருந்துள்ளனர். அவர்களில் மணிப்பூர் மாநிலத்தின் குகி இனத்தை சேர்ந்த லாம்நந்தியம் சிங்சன் மற்றும் மைதேயி இனத்தை சேர்ந்த கந்தோய் சர்மா காங்பிரெய்லாக்பம் ஆகிய இருவரும் அடங்குவர். இவர்களும் விமான விபத்தில் உயிரிழந்தனர். அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான தகவல் அறிந்ததும் இவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். லாம்நந்தியம், கந்தோய் இருவரும் உயிரிழந்த தகவல் அறிந்தவுடன் சமூக அமைப்பினர், மணிப்பூர் மக்கள் என அனைவரும் தங்கள் இன வேறுபாட்டை மறந்து அந்தக் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர். குகி – மைதேயி இனங்களை மறந்து அரசியல் கட்சியினரும் குடிமக்களும் பல்வேறு அமைப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன் சோகமான இந்த நேரத்தில் 2 குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
தவிர சமூக வலைதளங்களில் அந்த 2 விமானப் பணிப்பெண்களின் ஆத்மா சாந்தியடைய ஆழ்ந்த இரங்கல்கள் குவிந்தன. இதுகுறித்து டெல்லியில் உள்ள மைதேயி பாரம்பரிய சொசைட்டியின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘‘மணிப்பூர் மக்கள் அனைவருமே இதயம் நொடிந்து போயுள்ளனர். குகி, மைதேயி இனத்தை பொருட்படுத்தாமல், அனைவருமே இறந்த அந்த இளம்பெண்களுக்காக பிரார்த்தனை செய்தனர். இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக மணிப்பூரில் நடைபெற்று வரும் குக்கி – மைதேயி இனக் கலவரம், இந்த 2 இளம்பெண்களின் இறப்பால் மங்கியுள்ளது. அவர்கள் வானத்தின் தேவதைகள். அந்த 2 பெண்களின் மரணம், 2 இனங்களை ஒன்றிணைக்க உதவியுள்ளது. இந்த மனித உயிர் எத்தனை அரியது என்பதை அவர்களுக்கு உணர்த்தி உள்ளது. வாழும் வரை அமைதியாக ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதை அவர்களுடைய மரணங்கள் உணர்த்தி உள்ளது’’ என்றார்.
இதற்கிடையில், லாம்நந்தியம் மற்றும் கந்தோய் ஆகியோரின் குடும்பத்தினர் அகமதாபாத் விரைந்து சென்றனர். அங்கு உடல்களை அடையாளம் காண, டிஎன்ஏ பரிசோதனைக்காக தங்கள் ரத்த மாதிரிகளை வழங்கினர். உயிரிழந்த விமான பணிப்பெண்களின் ஆத்மா சாந்தியடைய டெல்லியில் உள்ள குகி இன மாணவர் சங்கம் மெழுகுவர்த்தி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. உயிரிழந்த லாம்நந்தியம் சிங்சன் குடும்பத்தில் அவர் மட்டும்தான் வருவாய் ஈட்டுபவராக இருந்துள்ளார். இவரது குடும்பத்தினர் காங்போக்பி என்ற பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். எக்ஸ் வலைதளத்தில் ஒருவர் கூறும்போது, ‘‘உயிருடன் இருக்கும்போது குகி – மைதேயி என பிரிவினை பார்க்கிறோம். ஆனால், மரணத்தில் அனைவரும் ஒரே விதியைத்தான் சந்திக்கிறோம் என்பதை 2 விமான பணிப்பெண்களும் உணர்த்தி உள்ளனர்’’ என்று தெரிவித்து உள்ளார்.