புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து புது டெல்லிக்கு வந்த விமானத்தின் லேண்டிங் கியர் பெட்டியில் ஒளிந்து பயணித்த ஆப்கானிஸ்தான் சிறுவனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லி வந்த விமானத்தின் லேண்டிங் கியர் பெட்டியில் பதுங்கியபடி பயணித்த 13 வயது சிறுவன், செப்டம்பர் 21 அன்று விமானம் புதுடெல்லியில் தரையிறங்கிய போது விமான நிலைய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டான். பழுப்பு நிற பதானி சூட் மற்றும் கருப்பு கோட் அணிந்த அந்த ஆப்கானிஸ்தான் சிறுவனின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆப்கானிஸ்தானின் குண்டூஸை சேர்ந்த அந்த சிறுவன் காபூல் விமான நிலையத்திற்குள் பதுங்கி, ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் செல்லும் விமானம் என தவறாக நினைத்து டெல்லி செல்லும் காம் ஏர் விமானத்தின் கியர் பாக்ஸில் ஏறி ஒளிந்துகொண்டுள்ளான். அச்சிறுவன் ஒரு சிறிய சிவப்பு நிற ஆடியோ ஸ்பீக்கரை மட்டுமே கையில் எடுத்துச் சென்றுள்ளான், அது தரையிறங்கும் போது அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக, சிறுவன் கியர் பாக்ஸில் ஒளிந்தபடி 1,000 கிமீ பயணித்து, புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காயமின்றி தரையிறங்கினான். ஆர்வத்தினால் தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக அச்சிறுவன் அதிகாரிகளிடம் கூறினான்.
விமானத்தின் கியர் பெட்டியில் ஒளிந்துகொள்வது நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்கள் பயன்படுத்தும் மிகவும் பொதுவான முறையாகும். ஆனால் இது மிகமிக ஆபத்தானது.
விமானம் பறக்கும்போது கியர் பெட்டியில் இருந்தால் உடல் நசுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. விமானம் அதிக உயரத்தை அடையும் போது நிலைமை மேலும் மோசமடையும். வெப்பநிலை -50 டிகிரி வரை குறைவதால், ஆக்ஸிஜன் அளவும் குறைவாகும். இதனால் இப்பெட்டியில் பயணிப்போர் உயிர் பிழைப்பது கடினமான காரியமாகும்.
அந்த சிறுவன் டெல்லி விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், காம் ஏர் விமானத்தின் மற்றொரு விமானமான ஆர்கியூ-4402 இல் அதே நாளில் காபூலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டான்.