லக்னோ: ராணுவ அதிகாரிகளை பாஜக சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் குறிவைப்பதாக சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ராம்கோபால் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். ராணுவத்தின் சீருடையை ‘சாதிவெறி கண்ணாடி’ மூலம் பார்க்க முடியாது என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
கர்னல் சோபியா குரேஷி ஒரு முஸ்லிம் என்பதால் பாஜக அமைச்சரால் குறிவைக்கப்பட்டதாகவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் ராஜ்புத் என்று நினைத்து விட்டுவிட்டதாகவும் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ராம்கோபால் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, கர்னல் குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் மே 7 முதல் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளங்கள் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்த விவரங்களை அளித்து செய்தியாளர்களிடம் உரையாற்றினர்.
இந்த நிலையில் மத்தியப் பிரதேச பாஜக அமைச்சரான விஜய் ஷா, “அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளின் சிந்தூரை அழித்தனர். அவர்களை அழிக்க நாம் அவர்களின் சகோதரியை (கர்னல் சோபியா) அனுப்பி பழிவாங்கினோம். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது இந்து சகோதரர்களைக் கொன்றனர். பிரதமர் மோடி, அவர்களின் (பயங்கரவாதிகளின்) சகோதரியை ராணுவ விமானத்தில் அனுப்பி அவர்களின் வீடுகளைத் தாக்கி பதிலடி கொடுத்தார். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளை விதவைகளாக்கினர். பிரதமர் மோடி, அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த சகோதரியை அவர்களுக்கு பாடம் கற்பிக்க அனுப்பினார்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கர்னல் சோபியா குரேஷியை குறிப்பிட்டு பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சமாஜ்வாதி எம்.பி ராம்கோபால் யாதவ், “அவர்களுடைய அமைச்சர்களில் ஒருவர் கர்னல் குரேஷியை திட்டினார். உயர் நீதிமன்றம் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவருக்கு வியோமிகா சிங் யார் என்று தெரியாது, ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி பற்றியும் தெரியாது, இல்லையெனில் இவர்கள் அவர்களையும் திட்டியிருப்பார்கள்.
வியோமிகா சிங் ஹரியானாவைச் சேர்ந்த ஜாதவ் மற்றும் ஏர் மார்ஷல் பாரதி பூர்னியாவைச் சேர்ந்த யாதவ். எனவே மூவரும் பிடிஏவைச் சேர்ந்தவர்கள் (பிச்டா, தலித், அல்பசாங்க்யாக் அல்லது பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர்). ஒருவர் முஸ்லிம் என்பதால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். மற்றொருவர் ராஜபுத்திரர் என்று நினைத்து காப்பாற்றப்பட்டார். பாஜகவினர் ஆயுதப்படைகளின் பங்களிப்புகளை ஒப்புக்கொள்வதை விட சுய மகிமைக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். மனநிலை மோசமாக இருக்கும்போது, ராணுவத்தின் சாதனைகளைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சாதனைகளையே முன்னிலைப்படுத்துகிறார்கள்.” என்று அவர் கூறினார். இந்த கருத்துக்கள் இப்போது மீண்டும் சர்ச்சையை பற்றவைத்துள்ளது.
இதுகுறித்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ஒரு துணிச்சலான மகளை சாதியின் எல்லைக்குள் பிணைக்கும் ராம்கோபால் யாதவின் செயல் கட்சியின் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது. இது இராணுவத்தின் வீரத்திற்கு அவமானம். ராணுவத்தின் சீருடையை ‘சாதிவெறி கண்ணாடி’ மூலம் பார்க்க முடியாது. இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரரும் ‘தேசிய கடமையை’ செய்கிறார். அவர்கள் எந்த சாதி அல்லது மதத்தின் பிரதிநிதி அல்ல” என்று தெரிவித்துள்ளார்