புதுடெல்லி: உ.பி.யின் புனிதத் தலமான வாராணசியில் காசி தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பை இங்குஉள்ள தமிழர்கள் தொடங்கி உள்ளனர். அனுமர் காட் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளையான காஞ்சி காமகோடி பீடத்தில் கடந்த புதன்கிழமை (ஆக. 27) தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவுடன் விநாயகர் சதுர்த்தியும் கொண்டாடப்பட்டது.
இங்கு உயரதிகாரிகளாக இருக்கும் தமிழர்களான வாராணசி மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம், கூடுதல் காவல் இணை ஆணையர் டி.சரவணன், வருமான வரி விசாரணைப் பிரிவு துணை இயக்குநர் ஆர்.ஐஸ்வர்யா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தமிழ்ச் சங்கத்தை தொடங்கி வைத்தனர்.
விழாவில் எஸ்.ராஜலிங்கம் பேசுகையில், “பன்னெடுங்காலமாக தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையறாத தொடர்பு உள்ளது. இந்த வரலாற்று உண்மையை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய கல்வி அமைச்சகம் மூலம் தொடர்ந்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதால், இந்திய அளவில் தமிழுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. காசி வாழ் தமிழர்கள் இதனை உணர்ந்து சங்கத்தின் மூலம் அரிய பணிகளை செய்யவேண்டும்’’ என்றார்.
காசி தமிழ்ச் சங்கத்தின் தலைவராக காஞ்சி காமகோடி பீடத்தின் மேலாளர் வி.எஸ்.சுப்பிரமணியம், பொதுச் செயலாளராக பனாரஸ் இந்து பல்கலைக்கழக தமிழ் பிரிவின் உதவிப் பேராசிரியர் த.ஜெகதீசன், துணைத் தலைவர்களாக காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் முன்னாள் உறுப்பினர் கி.வெங்கட் ரமண கனபாடிகள், எஸ்.கோபாலகிருஷ்ணன், துணைப் பொதுச் செயலாளர்களாக கு.தவசி முருகன், சு.சிவசுப்பிரமணியன், பொருளாளராக சிவசங்கரி சோமசுந்தரம், துணைப் பொருளாளராக பண்டிதர் சந்திரசேகர் திராவிட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 8 பேரில் மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தி ஜெயந்தி முரளியும் ஒருவர் ஆவார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பொதுச் செயலாளர் த.ஜெகதீசன் கூறும்போது, ‘‘காசியில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து, தமிழ்க் குடும்பத்தின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியைக் கற்பித்தல், திருக்குறள் வகுப்பு எடுத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கவுள்ளன’’ என்றார்.