வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காசி தமிழ்ச் சங்கம் துவக்கப்படுகிறது. இதற்கான விழா வாரணாசி மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம் தலைமையில் நடைபெறுகிறது.
காசி எனும் வாரணாசிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் வகையில் அங்கு காசி தமிழ் சங்கமங்கள் (கேடிஎஸ்) நடைபெறுகின்றன. தனது மக்களவைத் தொகுதி என்பதால் பிரதமர் நரேந்திர மோடியும் கேடிஎஸ் நிகழ்ச்சியை மத்திய, மாநில அரசுகளால் நடத்தி ஆதரவளிக்கிறார்.
எனினும், உ.பி.யின் இந்த புண்ணியத்தலத்தில் தமிழர்களுக்கு எனத் தனியாக ஒரு அமைப்பு இல்லை. இதன் காரணமாக, காசி தமிழ் சங்கம் எனும் பெயரில் வாராணசியில் வசிக்கும் தமிழர்கள் ஒரு சங்கத்தை துவக்குகின்றனர். இன்று ஆகஸ்ட் 27 புதன்கிழமை மாலை அதற்கான துவக்க விழா நடைபெறுகிறது.
இது அனுமன் காட்டிலுள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளையான காஞ்சி காமக்கோடி பீடத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. இத்துடன், இன்று விநாயகர் சதூர்த்தி என்பதால் அந்நாளுக்கான விழாவும் இணைந்து நடைபெறுகிறது. விழாவின் விருந்தினர்களாக வாராணசியில் பணியாற்றும் தமிழர்களான இரண்டு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில், மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம் ஐஏஎஸ் மற்றும் நகர காவல்துறை இணை ஆணையரான டி.சரவணன் ஐபிஎஸ் ஆகியோர் உரையாற்றவும் உள்ளனர்.
காசி தமிழ்ச் சங்கத்தின் தலைவராக காஞ்சி காமகோடி பீடத்தின் மேலாளரான வி.எஸ்.சுப்பரமணியம், பொதுச்செயலாளராக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவின் உதவி பேராசிரியர் த.ஜெகதீசன் தேர்வாகி உள்ளனர். துணைத் தலைவர்களாக காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் முன்னாள் உறுப்பினர் கி.வெங்கட் ரமண கணபாடிகள் மற்றும் எஸ்.கோபால கிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
துணைப் பொதுச் செயலாளர்களாக கு.தவசி முருகன் மற்றும் சு.சிவசுப்பரமணியன் இணைந்துள்ளனர். சிவசங்கரி சோமசுந்தரம் பொருளாளராகவும், துணைப் பொருளாளராக பண்டிதரான சந்திரசேகர் திராவிட் ஆகியோர் உள்ளனர். நிர்வாக உறுப்பினர்களாக எட்டு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவராக மகா கவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தியான ஜெயந்தி முரளியும் உள்ளார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பொதுச் செயலாளரான த.ஜெகதீசன் கூறும்போது, ‘வாரணாசி மாவட்ட ஆட்சியராக இருந்து தற்போது மண்டல ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ள எஸ்.ராஜலிங்கம் அவர்களது அறிவுறுத்தலின் பேரில், காசியில் வாழும் தமிழர்களை ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைக்கவும் அவர்களது நலன்களைப் பாதுகாக்கவும் ‘காசி தமிழ்ச் சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பைப் பதிவுசெய்துள்ளோம். இங்குள்ள தமிழ்க் குடும்பத்தின் குழந்தைகளுக்குத் தமிழ்மொழியைக் கற்பித்தல், திருக்குறள் வகுப்புகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கவுள்ளன’ எனத் தெரிவித்தார்.
வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்துக்களின் முக்கியப் புண்ணியத்தலமான இங்கு பல நூற்றாண்டுகளாகப் பல்லாயிரம் தமிழர்கள் வந்து செல்கின்றனர். இந்த வகையில், வந்துசென்ற தமிழர்கள் வாராணசியிலேயே தங்கி உள்ளனர். இங்கு தமிழர்கள் அதிகமாகத் தங்கியுள்ளப் பகுதியாக வாரணாசியின் கங்கை கரைகளில் ஒன்றான அனுமன் காட் உள்ளது. தமிழர்கள் சார்பில் குமாரசாமி மடம் மற்றும் ஸ்ரீகாசி நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரம் என இருபெரும் மடங்களும் வாரணாசியில் உள்ளன. மகாகவி பாரதியார் வாரணாசியில் தங்கியிருந்த அவரது சகோதரி வீடும் இந்த அனுமன் காட்டில் உள்ளது நினைவுகூரத்தக்கது.