பெங்களூரு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘‘2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு வைத்துக்கொண்டு, வாக்குகளை திருடியுள்ளது. பெங்களூருவில் உள்ள மகாதேவப்புரா சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டன” என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா, ‘‘வாக்கு திருட்டு விவகாரத்தில் காங்கிரஸார் வெட்கப்பட வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. அதனை ஏன் நாம் தடுக்கவில்லை? வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது நாம் ஆட்சேபம் தெரிவித்திருந்தால், இந்த பிரச்சினையை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும்” என்றார்.
அமைச்சர் கே.என்.ராஜண்ணாவின் இந்தக் கருத்தை பாஜகவினர் ஆதரித்த நிலையில், துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் எம்எல்ஏ எச்.டி. ரங்கநாத் கூறுகையில், ‘‘வாக்குத் திருட்டு விவகாரத்தை விசாரிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. விசாரணை முடிவடைவதற்கு முன்பே காங்கிரஸ் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராகப் பேசுவதை மன்னிக்க முடியாதது’’ என கண்டித்தார்.
மேலும் காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்தது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சித்தராமையா, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணாவை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தினார். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த கே.என்.ராஜண்ணா, நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
கே.என்.ராஜண்ணாவின் ராஜினாமா கடிதத்தை பெற்ற முதல்வர் சித்தராமையா ஏற்றுக்கொண்டு, உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவிக்குமாறு ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கடிதம் அனுப்பினார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.