புதுடெல்லி: ‘வாக்கு திருட்டு’ தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் 17-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பிஹாரில் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பெகல் தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பெகல், “கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். எனினும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 250 எம்பிக்கள் கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். எனினும், அவர்களை டெல்லி போலீசார் பாதி வழியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
ராகுல் காந்தியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த கேள்வி ஜனநாயகத்தின் சாரம். நாம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், வாக்குகள் திருடப்படுவதை நிறுத்த வேண்டியது அவசியம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். தற்போது, இந்த பிரச்சினை மக்களைச் சென்று சேர்ந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி பிஹாரில் வரும் 17-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பாத யாத்திரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி மிகப் பெரிய பேரணி நடைபெற உள்ளது. இதில், இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.
பிஹாரில் நடைபெற உள்ள தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பிஹாரின் சாசரம் நகரில் இன்று நடைபெற்றது. கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிஹார் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கே.சி.வேணுகோபால், “ஜனநாயகத்துக்கான போராட்டம் தெருக்களில் நடைபெற இருக்கிறது. வரும் 17-ம் தேதி முதல் ராகுல் காந்தியும் இண்டியா கூட்டணி கட்சிகளும் இணைந்து வாக்கு அதிகார யாத்திரை என்ற பெயரில் பிஹார் முழுவதும் பிரச்சாரங்களை மேற்கொள்ள உள்ளனர். சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராகவும், வாக்கு திருட்டுக்கு எதிராகவும் மிகப் பெரிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சார இயக்கமாக இது இருக்கும்.
சாசராமில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் வட்டார அளவிலான தலைவர்கள் கலந்து கொண்டார்கள். விழிப்புணர்வு யாத்திரை நேர்த்தியாக நடப்பதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதில் கீழ்மட்ட அளவிலான நிர்வாகிகள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். பிரச்சார இயக்கத்தின் முதல் நாள் முதல் அனைத்தும் வெற்றிகரமாக நடப்பதை உறுதிப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முக்கிய அறிவிப்பாக, “வாக்கு திருட்டுக்கு எதிராக நாளை (ஆக.14) இரவு 8 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்படும். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்படும். 5 கோடி கையெழுத்துக்கள் பெறப்பட்டு, தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.