புதுடெல்லி: கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் ஒரு வாக்காளர் இரண்டு முறை வாக்களித்ததாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில தேர்தல்களில் ‘வாக்கு திருட்டு’ மோசடி நடந்துள்ளதாக அண்மையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்தார். இதற்கு தேர்தல் ஆணையம் அவரிடம் இருந்து உறுதிமொழி பத்திரம் கேட்டிருந்தது.
மொத்தம் 5 விதமாக இந்த வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக இணையவழி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இதில் மக்கள் இணையவும் அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக சில ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக, கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரு வாக்காளர் இரண்டு முறை வாக்களித்ததாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் காட்டிய டிக் செய்யப்பட்ட ஆவணம் தேர்தல் அலுவலர் கொடுத்ததல்ல என்றும் குற்றச்சாட்டுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் கர்நாடக தலைமை தேர்தல் ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், “வாக்கு திருட்டு விவகாரம், ‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்று அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிராக உள்ளது. நியாயமான தேர்தல் முறைக்கு இது அவசியம். வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்தை நாங்கள் கோருகிறோம். இதை மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தணிக்கை செய்ய முடியும். எங்களது இந்த கோரிக்கையில் இணைந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்துங்கள் என நான் கேட்டுக் கொள்கிறேன். votechori.in/ecdemand அல்லது 9650003420 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து இதில் இணையலாம். இந்தப் போராட்டம் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானது.” என கூறியிருந்தார்.