பெங்களூரு: 2024 மக்களவைத் தேர்தலின் போது நடந்ததாக கூறப்படும் ‘வாக்கு திருட்டை’ கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் இன்று பேரணி நடத்தப்படுகிறது. மேலும், காங்கிரஸார் பேரணியாக சென்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கவுள்ளனர்.
“நமது வாக்கு, நமது உரிமை, நமது போராட்டம்” என்ற கோரிக்கையுடன் ‘வாக்காளர் அதிகார பேரணி’ இன்று பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் நடைபெறுகிறது. இப்பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் பல அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இப்பேரணியை முன்னிட்டு, பெங்களூரு போக்குவரத்து காவல்துறை, எம்ஜி சாலை, கப்பன் சாலை மற்றும் பழைய விமான நிலைய சாலைகளில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இப்பேரணியில் கர்நாடகா முழுவதிலுமிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று டெல்லியில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ராகுல் காந்தி நடத்தினார். அதில் அவர் கூறும்போது, “பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் மிகப் பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது. இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் சரியாக 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 11,965 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகி உள்ளன. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலி. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில், 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் நடந்திருந்தால், நாடு முழுவதும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். ஐந்து விதமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளன. போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள், படிவம் 6 தவறாக பயன்படுத்தப்படுவது ஆகியவை அந்த ஐந்து வகை.
நாட்டிலுள்ள இளைஞர்களின் வாக்குகள் திருடப்படுகின்றன. வாக்குகளை யார் திருடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முன்பு, எங்களிடம் ஆதாரம் இல்லை, ஆனால் இப்போது எங்களிடம் நூறு சதவீதம் ஆதாரம் உள்ளது. அனைத்துத் தரவுகளும் கிடைத்துள்ளன. இந்த வாக்குத் திருட்டு பல தொகுதிகளில் செய்யப்பட்டுள்ளது” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையத்தின் மீது முன்வைத்தார்.