ஆரா: பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் ஆகியவை வாக்கு திருட்டில் ஈடுபடுகின்றன என பிஹார் மாநிலத்தின் ஆரா பகுதியில் நடைபெற்ற யாத்திரையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார்.
பிஹாரில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதைக் கண்டித்து பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.
போஜ்பூரின் ஆரா பகுதியில் நேற்று நடைபெற்ற யாத்திரையில் ராகுல் காந்தி பேசியதாவது: வாக்காளர் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டது நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீதான தாக்குதல். பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை வாக்கு திருட்டில் ஈடுபடுகின்றன. மக்களின் வாக்கு திருட்டுக்கு எதிராக பிஹாரில் தொடங்கப்பட்ட வாக்காளர் அதிகார யாத்திரை தேசிய இயக்கமாக மாறியுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்கு களை திருடி தே.ஜ கூட்டணி அரசு வெற்றி பெற்றது. ஆனால், பிஹாரில் ஒரு ஓட்டைக் கூட பாஜக மற்றும் தேர்தல் ஆணை யம் திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வாக்கு என்பது தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமை. ஆனால், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நரேந்திர மோடி அரசு வாக்குகளை திருடுகிறது. வாக்குரிமையை அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ளது.
ஆனால், மக்களின் வாக்குரிமையை பாஜக பறிக்கிறது. நாட்டின் இதர பகுதிகளில் வாக்குகளை பாஜக மேலும் திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தற்போது பாஜக தலைவர்களை, வாக்கு திருடர்கள் என மக்கள் அழைக்கத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு ராகுல் பேசினார்.
அகிலேஷ் யாதவ்: இந்தப் பேரணியில் இண்டியா கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் சரண் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் ராகுல், ஆர்ஜேடி மூத்த தலைவர் தேஜஸ்வியுடன்
உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். கடந்த மக்களவை தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா உள்ளிட்டோரும் நேற்று பேரணியில் பங்கேற்றனர்.
இந்தப் பேரணி இதுவரை கயாஜி, நவாடா, ஷேக்புரா, லக்கி சராய், முங்கேர், கட்டிஹார், தர்பங்கா, மதுபானி, சீதாமர்ஹி, முசாபர்பூர், பூர்னியா, மேற்கு சம்பரண், கோபால்கஞ்ச்,கிழக்கு சம்பரண், சிவான், சரண் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. போஜ்பூர் மாவட்டத்தை கடந்த யாத்திரை பாட்னாவில் நாளை (செப்.1) நிறைவு பெறுகிறது.