இந்திய அரசியலும் பேரணிகளும், நடைபயணங்களும் பிரிக்க முடியாதவை. எத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருந்தால் என்ன களத்தில் மக்களோடு மக்களாக கலந்துவிட வைக்கும் உத்திகளின் விளைவுகள் பிரம்மாண்டமானதாகவே இருந்திருக்கின்றன. அந்த வகையில், 1300 கிமீ தூரம், 20 மாவட்டங்கள், 16 நாட்கள் பயணம் என பிஹாரில் வாக்கு அதிகாரப் பேரணியை நடத்திக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. இந்தப் பேரணி பிஹாரையும் தாண்டி ராகுல் காந்திக்கு ஒரு திருப்புமுனை என்ற பார்வைகள் வலுத்துள்ளன. அது பற்றி விரிவாகப் பார்வோம்.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) கடந்த ஜூலை மாதம் தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதுதான் இப்போது நடைபெறும் வாக்கு அதிகாரப் பேரணிக்கு விதை என்று சொல்லலாம்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் ‘பிஹார் சார்’ பற்றி விவாதிக்கக் கோரி காங்கிரஸும், பிற எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஒருபுறம், அதற்கு வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு பிடிவாதம் காட்டியது. மறுபுறம் சூறாவளி வேகத்தில் செயல்பட்ட தேர்தல் ஆணையம், திட்டமிட்டபடி சார்-க்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. தேர்தல் ஆணையத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் பிரதிகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கொடுக்கப்பட, சர்ச்சை இன்னொரு ரூபம் பெற்றது.
பிஹாரில் இறந்து போனவர்கள், நிரந்தரமாக முகவரி மாற்றம் செய்தவர்கள், போலி வாக்காளர்கள், சட்டவிரோதமாக ஊடுருவியர்கள், இந்தியக் குடிமக்கள் தான் என தங்களை நிரூபிக்க போதிய ஆவணங்கள் இல்லாதோர் எனக் கூறி 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.
பெங்களூருவில் ராகுல் காந்தி நடத்திய பிரஸ் மீட்டில், “நாங்கள் இவிஎம் குற்றச்சாட்டு சொன்னபோதெல்லாம் ஆதாரம் கேட்டீர்களே, இதோ ‘சார்’ என்ற பெயரில் பாஜகவின் அலுவலகம் போல் செயல்பட்ட தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்குத் திருட்டுக்கு ஆதாரம் இருக்கிறது எனக் கூறி ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிட்டார்.
வாக்குத் திருட்டு / வோட் சோரி சொல் அன்றிலிருந்து தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியது. வெறும் ட்ரெண்ட் என்று நின்றுவிடலாம் அரசியல் கோஷமாக உருவெடுத்துள்ளது. இளம் வாக்காளர்கள் மத்தியில் பெங்களூர் பிரஸ் மீட் பேசுபொருளானது. இன்ஸ்டாவில் என்டர்டெய்ன்மென்ட் ரீல்ஸ் பதிவிடுவோர் கூட வாக்குத் திருட்டு பற்றி பேசலாகினர்.
இந்தச் சூழலில் ராகுல் காந்தி ஆகஸ்ட் 17-ம் தேதி பிஹாரில் வாக்கு அதிகாரப் பேரணியை தொடங்கினார். இந்தப் பேரணியில் ஆர்ஜேடி முக்கியத் தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டுள்ளார். பேரணிக்கு பிரியங்கா காந்தி வருகை தந்தது கவனம் பெற்றது. இண்டியா கூட்டணித் தலைவர்களும் பேரணியில் கலந்து கொள்ளத் தொடங்க கடந்த புதன்கிழமை தமிழக முதல்வர் ஸ்டாலின், ராகுலுடன் வாக்கு அதிகாரப் பேரணியில் பங்கேற்றார். இது பிஹார் அரசியலையும் தாண்டி தேசிய அளவில் பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிஹார் தேர்தலுக்கான பேரணி என்பதைக் கடந்து தேசிய அளவில் ராகுலின் முக மதிப்புக்கு வலு சேர்க்கும் கூட்டமாகவும் இந்தப் பேரணி உருவெடுத்து வருகிறது. சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு வளைந்து கொடுத்ததால் அசிங்கப்பட்டு நிற்கிறது என்ற விமர்சனங்களை முன்வைக்கும் ராகுல் காந்தி, பாஜகவையும், மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். ‘ஊழல் ஒழிப்பு முகம் அல்ல… நீங்கள்தான் ஊழலின் முகம், ஜனநாயகத்தின் உச்சபட்ச உரிமையான வாக்குரிமையிலேயே ஊழல் செய்துள்ளீர்கள்’ என்று வறுத்தெடுத்து வருகிறார்.
ராகுல் செல்லுமிடமெல்லாம், காங்கிரஸ் கட்சியினரையும் தாண்டி மக்கள் தன்னெழுச்சியாக திரள்கின்றனர். பட்டியல் சமூக மக்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், சிறுபான்மையினர் என்று நாளுக்கு நாள் ராகுலுக்கு ஆதரவளிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தால் நம் கட்சி அனுதாபிகள் சிலருக்கே வாக்கு இல்லாமல் போய்விட்டது என்று அதிருப்தி தெரிவித்துவந்த பிஹார் பாஜகவினருக்கு ராகுலின் பேரணிக்கு பெருகும் ஆதரவு கூடுதல் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பேரணியை தடுக்க முடியாது, அதற்கு பெருகும் தன்னெழுச்சியான ஆதரவையும் கட்டுப்படுத்த முடியாது, போதாததுக்கு இண்டியா கூட்டணி தலைவர்களும் வந்து தேசத்தையே திரும்பிப் பார்க்க வைக்கின்றனர், இனியும் சும்மா இருக்கலாகாது என்று மாவட்டந் தோறும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, பொதுக் கூட்டங்கள் நடத்தலாம் என்று டேமேஜ் கன்ட்ரோலுக்காக பாஜகவும் முன்னெடுப்புகளை தொடங்கிவிட்டது.
பிஹார் தேர்தல் களம் என்பது முழுக்க முழுக்க சாதிய கணக்குகளால் நிர்ணயிக்கப்படுவது. யாதவர்கள், குர்மிகள், கோரிகள் என்ற ஓபிசி வகுப்பினர், பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் பல்வேறு சாதிய, மத, அடிப்படையில் தான் வாக்கு கணக்குகள் ஒர்க் அவுட் ஆகும். ஆனால், பிஹார் சார்-க்கு பின்னர் சாதிய சமரசங்கள் எல்லாம் இருக்கட்டும் இங்கே உங்கள் வாக்குரிமை மீதே புல்டோசர் விடப்பட்டுள்ளது. அதனால் பேதங்களை ஒதுக்கிவிட்டு உரிமைக்காக குரல் கொடுங்கள் என்று ஒரு பரந்துபட்ட தேர்தல் கணக்கை கட்டவிழ்த்துள்ளார் ராகுல் காந்தி.
சாதி அடிப்படையிலான அணி திரட்டலோடு, வாக்கு உரிமையையும் சேர்த்து ஜனநாயகத்தின் பாதுகாவலராக காங்கிரஸ் கூட்டணியை உருவகப்படுத்தும் முயற்சியை எடுத்துள்ளார் ராகுல் காந்தி. அதற்கான பலன்களையும் ஆதரவு அலை மூலமாக அறுவடை செய்யத் தொடங்கிவிட்டார்.
இது நிச்சயம் நிதிஷ் குமாருக்கும், நரேந்திர மோடிக்கும் செக் தான். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிஹாரில் நிதிஷ் வெற்றி பெறாவிட்டால், அவர் மத்தியில் பாஜகவுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், அரசியலில் நிதிஷ் போன்றதொரு நம்பகத்தன்மையற்ற தலைவரே இல்லை என்ற பெயரைத்தான் அவர் பெற்று வைத்திருக்கிறார். அணி மாறுவது அவருக்கு அல்வா சாப்பிடுவதுபோன்றது.
மத்திய அரசின் இன்னொரு வலுவான ஆதரவாளரான சந்திரபாபு நாயுடு, ராகுல் காந்தியுடன் திரைமறைவில் ஆலோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக வருகின்றன. இந்தச் சூழலில் பிஹாரில் நடைபெறும் பேரணி, பிஹார் அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் அதிர்வலைகளைக் கடத்தி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தது போல், செப்டம்பர் 1-க்குள் இன்னும் நிறைய முக்கியத் தலைவர்கள் ஆதரவு ராகுலுக்கு கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இவையெல்லாம், ராகுல் காந்திக்கும் பிஹாரைத் தாண்டி தேசிய அளவில் ஒரு வீச்சை நிச்சயமாக கடத்தியிருக்கிறது. 2022-ல் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரஸுக்கு புதிய ஒளியைக் கொடுத்தது. அது 2024 தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு பிரதிபலிக்கவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், அதைவிடவும் பெரிய வீச்சை, பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு பேரணியை பேரஸ்திரமாக கையில் எடுத்து சுழற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்திய ஒற்றுமை யாத்திரையில், ‘அன்பு தான் வெல்லும் எந்த நாளும்’ என்று வெறுப்புப் பிரச்சாரங்களை நோக்கி வாள் வீசினார் ராகுல் காந்தி, அது கூடவே வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சமூக நீதி என்ற பல பிரச்சினைகளையும் பதம் பார்த்தது. நாடு தழுவிய அந்த ஒற்றுமை யாத்திரையின் பிராடர் பெர்ஸ்பெக்டிவ் தான் கர்நாடகாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது பிஹார் மாநிலத்தின் வாக்கு அதிகாரப் பேரணி பிஹாரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா, கூடவே அதன் பிராடர் பெர்ஸ்பெக்டிவ் தேசிய அரசியலில் புதிய கணகுகளுக்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.