‘வாக்குத் திருட்டு’ விவகாரம் குறித்து மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி தனது குழு திரட்டியதாக சில ஆதாரங்களை முன்வைத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மீதும், மத்தியில் ஆளும் பாஜக மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி. ‘இன்றொரு ஹைட்ரஜன் குண்டு வீசப்படும்’ என்று டீஸர் வெளியிட்டு ராகுல் ஆற்றிய உரைக்கு ஆதரவாகவும், அவரைக் கண்டித்தும் கருத்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அது பற்றிய ஒரு விரைவுப் பார்வை…
ராகுல் வெளியிட்ட தகவல்கள்: “வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்து நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறேன். நாடு முழுவதுமே வாக்குத் திருட்டு நடந்துள்ளது. நாங்கள் ஒவ்வொரு மாநிலம் பற்றியும் ஆதாரங்கள் வெளியிடும்போது நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள். அதுவும் காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய தொகுதிகள் கண்டறியப்பட்டு வாக்குத் திருட்டு நடந்துள்ளது.
கர்நாடகாவின் ஆலந்த் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அது பற்றி 100% ஆதாரத்துடன் வந்துள்ளேன். இந்த தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது தற்செயலாக அம்பலமாகிவிட, நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டனர். ஆன்லைனில் இந்த மோசடியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்தத் தொகுதியில் 2023-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
வாக்காளர் பெயர் ஒன்று பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. அது மீண்டும் ஆன்லைனில் வெறும் 36 நிமிடங்களில் தேர்தல் ஆணையத்தின் ஆவணத்தை பூர்த்தி செய்து பெயர் சேர்க்கப்படுகிறது. இன்றைய இந்திய இளைஞர்களுக்கு நான் ஒரு தேர்வு வைக்கிறேன். வெறும் 36 விநாடிகளில் அதுவும் அதிகாலை 4.03 மணிக்கு யாரோ ஒருவர் எழுந்து இந்த வேலையை செய்வதெல்லாம் சாத்தியமா? தேர்தல் ஆணையம் ஜனநாயகப் படுகொலையாளர்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து கடந்த 18 மாதங்களில் 18 முறை இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மாநில சிஐடி தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுவிட்டது. இந்த வாக்குத் திருட்டில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்ற தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் நேரடியாக முயற்சி செய்கிறார்” என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
நீதிமன்றம் நாடப்படுமா? – ராகுல் காந்தி மீண்டும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைக்க, இத்தனை ஆதாரங்களைக் கூறும் நீங்கள் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவீர்களா என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். அதற்கு ராகுல் காந்தி, “வாக்குத் திருட்டு தொடர்பான ஆதாரங்கள் இத்தோடு நிற்கப்போவதில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் விரிவான ரிப்போர்ட் வெளியிடப்படும். உண்மையில் எனது வேலை ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்பதுதான். ஆனால் நான் ஜனநாயக அமைப்பை பாதுகாக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். இது எனது வேலை இல்லை.
இதை நாட்டின் ஜனநாயக அமைப்பு (தேர்தல் ஆணையம்) செய்ய வேண்டும். அது தனது கடமைகளை செய்யத் தவறியதால் நான் செய்து கொண்டிருக்கிறேன். இந்த வாக்குத் திருட்டு விவகாரம் தொடர்பாக எனது குழுவினர் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது, இத்துடன் முடியப்போகும் விஷயமில்லை. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஒரு விரிவான ரிப்போர்ட் பகிரப்படும்” என்று கூறினார்.
இதன்மூலம் ராகுல் காந்தியோ, காங்கிரஸோ இவ்விவகாரத்தை பாஜகவுக்கு எதிரான வலுவான ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளது உறுதியாகிறது. அந்தத் தரப்பு இப்போதைக்கு இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.
தேர்தல் ஆணையம் எதிர்வினை: “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை. இந்திய தேர்தல் ஆணையத்தின் உண்மை சரிபார்க்கும் குழு இதனை உறுதிப்படுத்துகிறது. ராகுல் காந்தி கருதுவதைப் போல, எந்த ஒரு வாக்காளரையும் எவர் ஒருவரும் ஆன்லைனில் நீக்க முடியாது. 2023-ல் கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் வாக்காளர்களை மோசடியாக நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதை முதலில் கண்டுபிடித்ததே தேர்தல் ஆணையம் தான். அந்த முயற்சி தோல்வியடைந்ததையும் நாங்கள் சுட்டிக் காட்டியிருந்தோம். இது குறித்து விசாரிக்கும்படி புகாரும் அளித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
பாஜக விமர்சனம்: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான அனுராக் தாக்குர், “அரசியலமைப்பு நிறுவனங்கள் மீது ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.
ஊடுருவல்காரர்களுக்கே முதல் முன்னுரிமை என்பதே ராகுல் காந்தியின் திட்டமாகத் தெரிகிறது. சட்டவிரோத வாக்காளர்களைப் பாதுகாப்பது என்ற காங்கிரஸின் திட்டத்தை அனுமதித்தால், எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மக்களின் நலன்கள் மிகவும் பாதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
கார்கே தாக்கு: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, “கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் நடந்த வாக்காளர்கள் நீக்கத்தில் ஈடுபட்டவர்களை தேர்தல் ஆணையம் அரண்போல் நின்று பாதுகாக்கிறது” என்று எக்ஸ் பக்கத்தில் வெகுண்டெழுந்துள்ளார். ஏற்கெனவே ‘தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டு இயந்திரம்போல் செயல்படுகிறது.’ என்று அவர் குற்றஞ்சாட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.
காங்கிரஸ் பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி அளித்த ஊடகப் பேட்டியில், “இது நன்கு திட்டமிடப்பட்ட முயற்சி. இதில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பது தெள்ளத் தெளிவாக அம்பலமாகியுள்ளது. இந்தத் திருட்டை ராகுல் காந்தி ஆதாரங்களுடன் மிக அப்பட்டமான அம்பலப்படுத்தியுள்ளார்” என்றார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தொகுதியை முன்வைத்து ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா. “கர்நாடகா மக்களின் சார்பில், தேர்தல் ஆணையம் உடடினடியாக தேர்தல் திருட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கணினியின் ஐபி விவரம், ஓடிபி விவரம் உள்ளிட்டவற்றை ராகுல் கூறியதுபோல் ஒரு வாரத்துக்குள் கர்நாடகா சிஐடி-யிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அதுவே வாக்குத் திருட்டில் தேர்தல் ஆணையத்துக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதி செய்வதாகிவிடும்.” என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன் சொன்னது என்ன? – இதற்கிடையில், மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசன் அளித்த பேட்டியொன்றில், “வாக்குத் திருட்டு விவகாரத்தில் உண்மையில்லை என்றால் அதை தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என்றால், அது ஏன் எழுகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும்” என்று பளீச்சென ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார். இந்த ரத்தினச் சுருக்கமான ரியாக்ஷன் கவனம் பெற்றுள்ளது. இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பலரும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இது வெறும் குற்றச்சாட்டு அரசியலா? – இந்தச் சூழலில் பாஜக முன்வைக்கும் பிரதான கருத்து, ராகுல் காந்தி முன்னெடுப்பது எல்லாம் குற்றச்சாட்டு அரசியல் தவிர வேறொன்றும் இல்லை என்பதாகவே உள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி அளித்தப் பேட்டியில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அதை விடுத்து அவரை சாடி என்னவாகப் போகிறது?” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.