புதுடெல்லி: “வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கம், தகுதியற்றவர்களின் பெயர்கள் சேர்ப்பு தொடர்பான உங்கள் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள சத்தியப் பிரமாண ஆவணத்தில் கையெழுத்திட்டு அனுப்புங்கள்” என்று ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேர்தல்களில் மோசடி நடப்பதாக பல்வேறு தரவுகளின் அடிப்படையில் குற்றம்சாட்டினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை அடுத்து, தலைமை தேர்தல் அலுவலர் (தலைமை நிர்வாக அதிகாரி) அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, வாக்காளர் பட்டியல் பத்தி 3-ன்படி, தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நீங்கள் கூறியதை புரிந்து கொள்ள முடிகிறது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 20(3)(b)-ன் கீழ் இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிரகடனத்தில் / சத்தியப் பிராமணத்தில் கையொப்பமிட்டு திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மிக விரைவாக இக்கடிதத்தின் மூலம் பதில் அளித்துள்ளது. இதன்மூலம், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதும் எடுக்காததும் தற்போது ராகுல் காந்தியின் கைக்குச் சென்றுள்ளது.
முன்னதாக, டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “தேர்தல் முடிவுகள் திட்டமிடப்படுகின்றன. இதற்கு, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதிக்கு கிடைத்த முடிவுகளே சாட்சி. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 16 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணிக்கை கிடைத்தது. ஆனால், நாங்கள் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம்.
வெற்றி வாய்ப்புள்ள 7 தொகுதிகளில் நாங்கள் தோல்வி அடைந்தோம். இந்த தோல்வி குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். குறிப்பாக, காங்கிரஸ் தோல்வி அடைந்த ஒரு மக்களவை தொகுதியில் உள்ள ஒரு சட்டப்பேரவைத் தொகுதியை நாங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். தேர்தல் முடிவுகள் தொடர்பான தரவுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் தரவுகளே.
பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டப்பேரவைத் தொகுதிதான் நாங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தொகுதி. இந்த தொகுதியில் காங்கிரஸ் 1,15,586 வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக, 2,29,632 வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது.
எங்கள் ஆய்வில், இந்த மகாதேவ்புரா சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதைக் கண்டறிந்தோம். அதாவது, ஒரு லட்சத்து 250 வாக்காளர்கள் போலி வாக்காளர்கள் என்பது கண்டறியப்பட்டது. இதில், 11,965 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகி உள்ளன. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலி. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
புதிய வாக்காளர்களை பதிவு செய்வதற்கான ஃபார்ம் 6 (Form 6) ஆவணத்தை 33,692 பேர் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர். திட்டமிட்ட ரீதியில் தேர்தல் முடிவுகளை சீர்குலைக்கும் முயற்சி இது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல பதிவுகளில் வீட்டு எண் 0 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றை படுக்கை அறை கொண்ட முகவரியில் 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்தைப் பார்வையிட்டபோது அங்கு யாரும் வசிக்கவில்லை. கர்நாடகாவில் ஒரே நபர் பல பூத்களில் வாக்குகளை செலுத்தியள்ளார். இப்படி பலர் வாக்குகளை செலுத்தி உள்ளனர்.
இது ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வு மட்டுமே. இந்த ஆய்வை நாங்கள் செய்து முடிப்பதற்கு எங்களுக்கு 6 மாதங்கள் ஆகி உள்ளது. தேர்தல் ஆணையம் மின்னணு தரவுகளை வழங்குமானால், 30 நிமிடங்களில் இந்த ஆய்வை முடித்துவிட முடியும்.
தேர்தல் முடிவுகள் திருடப்படுகின்றன என்ற எனது நீண்ட கால சந்தேகத்தை மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தின. வாக்காளர் பட்டியல் குறித்த தரவுகளை இயந்திரத்தின் மூலம் எளிதில் கண்டறிய முடியும். ஆனால், அத்தகைய தரவுகளை தேர்தல் ஆணையம் தருவதில்லை. இது, தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை திருடுகிறது என்பதை எங்களுக்கு உணர்த்தியது. தேர்தல் செயல்முறையை சீர்குலைக்க ஜனநாயக நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.