புதுடெல்லி: பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் சிறப்புத் திருத்த நடவடிக்கையை எதிர்த்து ஜனநாயக சீர்த்திருத்த சங்கம்(ஏடிஆர்) உள்ளிட்ட அமைப்புகளின் மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜோய்மால்ய பக் ஷி அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்து அளிக்கும் தீர்ப்பு நாடு முழுவதற்கும் பொருந்தும்.
விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ரத்து செய்யப்படும். இந்த விவகாரம் தொடர்பான வாதங்களை அடுத்த விசாரணை நடைபெறும் அக்டோபர் 7-ம் தேதி முன் வைக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், பிஹாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையையும் 12-வது அடையாள ஆவணமாக ஏற்க கடந்த 8-ம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக்கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.