புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக 11 ஆவணங்களில் ஒன்றை தேர்தல் ஆணையம் கேட்பது வாக்காளருக்கு சாதகமான அம்சம்தான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெறுகிறது. இதை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலா பாக்சி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடும்போது, “வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது இந்திய குடியுரிமைக்கு ஆதாரமாக ஆதாரை ஏற்க மறுக்கும் தேர்தல் ஆணையம், வேறு 11 ஆவணங்களை கேட்பது வாக்காளர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகும்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்யகாந்த், “11 ஆவணங்களையும் கேட்டால் அது வாக்காளருக்கு எதிரான நடவடிக்கைதான். ஆனால், 11-ல் ஏதாவது ஒன்றைத்தானே கேட்கிறார்கள். அதுவும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் திருத்தப் பணியின்போது 7 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்த முறை 11 ஆக அதிகரித்திருக்கிறது. இது வாக்காளர்களுக்கு சாதகமான அம்சம்தான்’’ என்றார்.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடும்போது, “தேர்தல் ஆணையம் கூறியுள்ள பட்டியலில் உள்ள ஆவணங்கள் குறைவான அளவிலேயே மக்களிடம் புழக்கத்தில் உள்ளன. உதாரணமாக பாஸ்போர்ட் ஒரு ஆதாரமாக ஏற்கப்படுகிறது. ஆனால் பிஹாரில் சுமார் 2% பேரிடம் மட்டுமே பாஸ்போர்ட் உள்ளது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி பாக்சி கூறும்போது, “அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்குவதை உறுதி செய்வதற்காக, பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து கருத்துகளை கேட்டுதான் 11 ஆவணங்களை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டு இருக்கிறது” என்றார்.
முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, ஆதார் அட்டை என்பது குடியுரிமை சான்று கிடையாது என்றும் அதை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்து.