பாட்னா: தேர்தல் ஆணையம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார்.
வாக்காளர் அதிகார யாத்திரையின் இறுதி நாளான இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “வாக்காளர் அதிகார யாத்திரையின்போது கிடைத்த ஆதரவு மிகப் பெரியது. மக்கள் பிஹாரில் இருந்து தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தை அரியணையில் இருந்து அகற்றுவார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. நாட்டு மக்களிடம் பாஜக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவர்களை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிவார்கள். பிஹாரில் இருந்து தேசத்துக்கு ஒரு செய்தி அனுப்பப்படும். அரசியலமைப்பு, ஜனநாயகத்தை அழிக்க விரும்புவோருக்கு தகுந்த பதில் வழங்கப்படும். யாத்திரையில் எங்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது” என்று கூறினார்.
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி மேற்கொண்ட 16 நாள் யாத்திரை இன்று பாட்னாவில் முடிவடைகிறது. ஆகஸ்ட் 18-ஆம் தேதி ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சசாரத்தில் இருந்து ஒன்றாக யாத்திரையை தொடங்கினர்.