பாட்னா: வளர்ச்சி அடைந்த மாநிலமாக பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, நேற்று பிஹார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிஹார் சென்ற பிரதமர் மோடியை, முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து மோதிஹரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
மேலும், பாட்னாவில் இருந்து டெல்லி, மோதிஹரியில் இருந்து டெல்லி, தர்பாங்காவில் இருந்து லக்னோ, மால்டா நகரில் இருந்து லக்னோவுக்கு இடையிலான அம்ரித் பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
முன்பு இருந்த காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள அரசுகள் பிஹார் மாநிலத்தைப் புறக்கணித்தன. இதனால் அந்த மாநிலத்துக்கு நிதி ஒதுக்குவதில் அந்த அரசுகள் சுணக்கம் காட்டின. பிஹாரில் நிதிஷ்குமார் அரசு அமைந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை. பாரபட்சமாக நிதி ஒதுக்கியது. ஆனால் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தபோது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பிஹார் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து நிதி உதவியையும் செய்து கொடுத்தோம். இதனால் பிஹார் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது.
பிஹார் மாநிலத்தை வளர்ச்சி பெற்ற பிஹாராக நாம் மாற்றவேண்டும். தற்போது பிஹாரில் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து செயல்படுவதே காரணம். காங்கிரஸ் தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது பிஹாருக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி மட்டுமே கிடைத்தது.
பிஹார் வளமாக இருந்தால், நாடு வளமாக இருக்கும். பிஹார் இளைஞர்கள் வளமாக இருந்தால், பிஹார் வளமாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசுக்கு ஆதரவாக முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு செயல்படுகிறது. இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.