புதுடெல்லி: 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கிய நாட்டின் பயணத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவின் சர்வதேச ஐக்கிய நாடுகள் இயக்கம் -2025 மாநாட்டை நொய்டாவில் தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல், “2022 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அடுத்த 25 ஆண்டுகள் நாட்டுக்கு மிக முக்கியமான காலகட்டம் என்றும், இந்த அமிர்த காலத்தில் நாம் அனைவரும் இணைந்து 2047க்குள் இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதை கருத்தில் கொண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு இளைஞர்கள் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும்.
இந்தியா ஒரு பெரிய மாற்றத்தின் உச்சத்தில் நிற்கிறது. அமிர்த காலத்திற்கான ஐந்து உறுதிமொழிகளின்படி, 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். ஐந்து உறுதிமொழிகளில் முதலாவது, இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான உறுதிமொழி. இரண்டாவது உறுதிமொழி, காலனித்துவ மனநிலையை கைவிடுவது. பல நூற்றாண்டுகளாக காலனித்துவ அடிமைத்தனம் நமது நம்பிக்கையை அழித்து, கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த காலத்தின் கட்டுப்பாடுகளால் நாம் கட்டுப்படக்கூடாது.
மூன்றாவது உறுதிமொழி இந்தியாவின் பாரம்பரியத்தில் பெருமை கொள்வது. வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதை நோக்கி நாம் நகரும்போது இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம், மரபுகள் மற்றும் மதிப்புகள் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. நான்காவது, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு. ஒற்றுமையே இந்தியாவின் மிகப்பெரிய பலம். ஒற்றுமையை நாம் ஒவ்வொரு மட்டத்திலும் வளர்க்க வேண்டும். வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான நாட்டின் பயணத்துக்கு இந்தக் கூட்டு மனப்பான்மை அடிப்படையானது.
ஐந்தாவது உறுதிமொழி, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான 140 கோடி இந்தியர்களின் கூட்டுத் தீர்மானத்தின் மீது உறுதி கொள்வது. அனைத்து மக்களும் ஒரு குடும்பத்தைப் போல, பகிரப்பட்ட பொறுப்புடன் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக முடியும். தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை இளைஞர்கள் ஒரு கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஒவ்வொரு பணியையும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.
இளைஞர்கள் பொது வாழ்வுக்கு அதிக அளவில் வர வேண்டும். 2024 சுதந்திர தினத்தன்று பிரதமர் தனது உரையில், மாற்றத்தின் முகவர்களாக மாற ஒரு லட்சம் இளைஞர்களும் பெண்களும் அரசியலிலும் பொது சேவையிலும் நுழைய அழைப்பு விடுத்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கருணை, அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையுடன் கொள்கை வகுப்பதில் பங்களிக்க திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள நபர்கள் தேவை.
நாளைய இந்தியாவின் மாற்றத்தை உருவாக்குபவர்களாகவும், இயக்குபவர்களாகவும் இளைஞர்கள் இருக்க வேண்டும். கூட்டு உறுதியுடன், நாம் ஒவ்வொரு சவாலையும் கடந்து நமது நாட்டை உயர்ந்த உச்சத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என தெரிவித்தார்.