புதுடெல்லி: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், பிரதமர் மோடியுடன் பேசுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இசைவு தெரிவித்துள்ளார்.
உலகளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இந்த நிலையில், இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து, இந்தியாவுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ட்ரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால், இந்தியாவில் தொழில் துறை கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். வரும் வாரங்களில் எனது நல்ல நண்பரான மோடியுடன் பேசுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன். இரு பெரிய நாடுகளுக்கும் வர்த்தக பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ”இந்தியாவும் – அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள். இயல்பான கூட்டாளிகள். நமது வர்த்தகப் பேச்சுவார்த்தை நம் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையற்ற திறன்களை கண்டெடுப்பதற்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதிபர் ட்ரம்ப்புடன் பேசுவதை நானும் எதிர்நோக்கியுள்ளேன். இரு நாட்டு மக்களுக்கும் வளமான, பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க நாம் உழைப்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.
இருநாட்டுத் தலைவர்களும் வர்த்தக தடை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது நல்ல முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.