புதுடெல்லி: வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
வருமான சமத்துவத்துக்கான கினி (Gini Index) குறியீட்டில் இந்தியா 25.5 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ஸ்லோவாக் குடியரசு 24.1 மதிப்பெண்களும், ஸ்லோவேனியா 24.3 மதிப்பெண்களும், பெலாரஸ் 24.4 மதிப்பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களில் உள்ளன.
2011-12 மற்றும் 2022-23 க்கு இடையில் இந்தியாவில் வருமான சமத்துவமின்மை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் உலகளவில் நான்காவது வருமான சமத்துவம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் பெரிய அளவில் குறைந்ததே, வருமான சமத்துவமின்மை குறைய காரணமாகியுள்ளது. இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் 2011-12ல் 16.2% லிருந்து 2022-23 இல் 2.3% ஆகக் குறைந்துள்ளது என்று உலக வங்கியின் தரவுகள் தெரிவித்துள்ளன.
சமத்துவத்தின் அளவீடான சிறந்த கினி குறியீட்டு மதிப்பெண்களில், சீனா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளை விட இந்தியா மிகவும் சிறந்த நிலையில் உள்ளது. இந்தப் பட்டியலில் சீனா 35.7 மதிப்பெண்களையும், அமெரிக்கா 41.8 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
ஒரு நாட்டில் மக்களுக்கு இடையே உள்ள வருமானம், வளம் உள்ளிட்டவை எவ்வளவு சமமாகப் பகிரப்படுகிறது என்பதை அளவிட கினி குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதில் மதிப்பெண்கள் 0 முதல் 100 வரை இருக்கும். 0 மதிப்பெண் என்பது முழுமையான வருமான சமத்துவம் எனப் அளவிடப்படுகிறது. 100 மதிப்பெண் என்பது முழுமையான வருமான சமத்துவமின்மை கொண்ட நாடாக அளவிடப்படுகிறது.