புதுடெல்லி: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுடன் இணைந்து தெற்காசியாவிலேயே மிக பெரிய கச்சா எண்ணெய் கிடங்கு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றை வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது மட்டுமின்றி, தாமிரம் மற்றும் அது தொடர்பான பொருட்களின் இறக்குமதிக்கு 50 சதவீத வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு கடந்த 2024-25 நிதி ஆண்டில் 360 மில்லியன் டாலர் மதிப்பிலான தாமிர பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இந்நிலையில், தற்போது இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் தாமிர பொருட்களின் விலை அதிகரித்து, இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
பாகிஸ்தானுடன் நெருக்கம்: இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தனது சமூக வலைதள பதிவில், ‘பாகிஸ்தானுடன் இப்போதுதான் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை முடிவு செய்துள்ளோம். அதன்படி, பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பை உருவாக்க இருக்கிறோம். இது தெற்காசியாவிலேயே மிகப்பெரியதாக இருக்கும். இதற்காக தகுதியுள்ள எண்ணெய் நிறுவனங்களை தேர்வு செய்து வருகிறோம். யாருக்கு தெரியும், ஒருநாள் பாகிஸ்தானிடம் இருந்துகூட இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயானை பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இரு நாட்டு மக்களின் பொதுவான நலனுக்காக இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் உள்ள பரஸ்பர ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்தனர்.
இந்தியாவில் நீண்டகாலம் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்த 2-வது நபர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். அவரது சேவை தொடர வேண்டும் என்றும் அல் நயான் வாழ்த்தினார் என மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய பொருட்களுக்கு ட்ரம்ப் 25 சதவீத வரி விதித்த நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் வர்த்தக வரி குறித்து ஐக்கிய அரபு
அமீரக அதிபருடன், பிரதமர் மோடி பேசி இருக்கலாம். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சில முக்கிய வியூகங்களை வகுக்கும் வகையிலும் பிரதமர் மோடி பேசியிருக்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறின.
மக்களவையில் அமைச்சர் விளக்கம்: இதற்கிடையே, அமெரிக்காவின் வரி விதிப்பு அறிவிப்பு தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சியினர் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர தொழில்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடின உழைப்பு மற்றும் மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களால் இந்த சாதனை சாத்தியமானது.
உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்வதாக சர்வதேச நிதி அமைப்புகள், சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். பொருளாதார ரீதியாக நாட்டின் நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தியா – அமெரிக்கா இடையே பலசுற்றுபேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. 10-15 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆகஸ்ட் 25-ல் பேச்சுவார்த்தை: வரி விகிதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் உயர்நிலை குழு ஆகஸ்ட் 25-ம் தேதி டெல்லி வருகிறது. அப்போது கருத்து வேறுபாடுகள் களையப்படும். அதன்பிறகு, இந்திய உயர்நிலை குழு வாஷிங்டன் செல்லும்.
இந்திய தரப்பில் மூத்த பொருளாதார ஆலோசகர் ராஜேஷ் அகர்வாலும், அமெரிக்க தரப்பில் பிரென்டனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அக்டோபர் அல்லது நவம்பரில் அமெரிக்காவுடன் முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
கடந்த ஜூலையில் தென்கொரிய பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த வரியை 15 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. இதேபோல, இந்திய பொருட்கள் மீதான வரியையும் அமெரிக்க அரசு நிச்சயமாக குறைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.