பெங்களூரு: வலிமையான நிலையில் இருந்து அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும், காலக்கெடுவுக்கு கட்டுப்பட்டு அல்ல என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஏற்கெனவே செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், “இரு தரப்பினருக்கும் பயன் அளிக்கக் கூடியதாக இருந்தால் மட்டுமே, அது சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தமாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்க ஒப்பந்தமாகவும் இருக்கும். எங்களின் தேச நலன்தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதை மனதில் கொண்டே எங்களின் முடிவு இருக்கும். வளர்ந்த நாடுகளுடன் அத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக உள்ளது” என்று கூறியிருந்தார்.
பியூஷ் கோயலின் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பியூஷ் கோயல் எப்படி வேண்டுமானாலும் மார்தட்டிக் கொள்ளட்டும். நான் சொல்வதை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். ட்ரம்ப்பின் வரிவிதிப்பு காலக்கெடுவுக்கு மோடி அடிபணிவார்” என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பெங்களூருவில் பதிலளித்த பியூஷ் கோயல், “நாங்கள் தேச நலனை மனதில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்துகிறோமே தவிர, காலக்கெடுவை மனதில் கொண்டு அல்ல. உலகின் பல நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளின்போதும், தேச நலனே எங்களுக்கு மிக முக்கியமானதாக இருந்தது.
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் ஆகிய நான்கு நாடுகளைக் கொண்ட எஃப்இடிஏ (EFTA – ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம்) குழுவுடன் நாங்கள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். கடந்த மாதம் இங்கிலாந்துடன் இதேபோன்ற ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.
27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஓமன், பெரு, சிலி உள்ளிட்ட பிற வளர்ந்த நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. இன்று, இந்தியா வலிமையான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. நாங்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள். உலகில் உள்ள எவருடனும் நம்மால் போட்டியிட முடியும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த பலவீனமான இந்தியா அல்ல இது. நாட்டு நலனை கருத்தில் கொள்ளாமல் பல்வேறு ஒப்பந்தங்களை நிறைவேற்றிய அரசு அது” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் வரிவிதிப்பு காலக்கெடு விவகாரம் என்ன? – அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலடியாக பரஸ்பர வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அதற்கான பட்டியலையும் வெளியிட்டார். எனினும், சில நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததால், பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இதையடுத்து, அமெரிக்காவுடன் பல நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
அந்த 90 நாள் காலக்கெடு வரும் வரும் 9-ம் தேதி நிறையவடைய உள்ள நிலையில், பிரிட்டன் மற்றும் வியட்நாம் ஆகிய 2 நாடுகளுடன் மட்டுமே அமெரிக்கா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்தியா – அமெரிக்கா இடையே வரி விதிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், 12 நாடுகளுக்கான வரி விதிப்பு தொடர்பான கடிதங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். எந்தெந்த நாடுகள் என்ற விவரம் திங்கள்கிழமை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.