பாட்னா: பிஹார் மாநிலம் பாட்னா-கயா இடையே உள்ள ஜெகனாபாத் பகுதியில் ரூ.100 கோடியில் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.
ஜெகனாபாத் பகுதியில் சுமார் 7.48 கிலோமீட்டர் தூரம் அமையும் இந்த சாலையில் நடுவில் இருந்த மரங்கள் இடையூறாக இருந்தன. இதனையடுத்து அந்த மரங்களை அகற்றும்படி வனத்துறையிடம் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்தது. ஆனால், இதற்கு பதிலாக வனத்துறைக்கு 14 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு வனத்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், இதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதனால், அங்கு சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வழியில் இருந்த மரங்களை அகற்றாமலேயே அங்கு சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்து விட்டனர். மரங்கள், சாலையின் ஓரம் அமையாமல் சாலைக்கு நடுவில் ஆங்காங்கே உள்ளன.
மரங்கள் வரிசையாக இல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றும் குறுக்கும் நெடுக்குமாக உள்ளதால் இப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் உள்ளனர். இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயமுள்ளது என வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே இப்பகுதியானது விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக உள்ளது. எனவே, மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது நெடுஞ்சாலைத்துறையா அல்லது வனத்துறையா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.