இடாநகர்: அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.5,100 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தில் இரு நீர் மின் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மேலும் அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் 9,820 அடி உயரத்தில் அதிநவீன மாநாட்டு மையம் அமைக்கவும் அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டில் முதல் சூரியோதயம் அருணாச்சல பிரதேசத்தில் தொடங்குகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மாநில மக்களின் வாழ்க்கையில் விடியல் பிறக்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றது முதல் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறேன். இதன்காரணமாக ஒட்டு மொத்த வடகிழக்கும் அபரிதமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. என்னை பொறுத்தவரை மக்களே கடவுள்.
கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் அருணாச்சல பிரதேசத்தின் வளர்ச்சிக்காக ரூ.6,000 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் அருணாச்சல பிரதேசத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி செலவிடப்பட்டு இருக்கிறது. காங்கிரஸைவிட பாஜக ஆட்சிக் காலத்தில் 16 மடங்கு அதிகமாக நிதி வழங்கப்பட்டு இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்தில் சேலா சுரங்கப் பாதை திறக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை மாநிலத்தின் அடையாளமாக மாறியிருக்கிறது. மக்களின் போக்குவரத்து எளிதாகி உள்ளது. சுற்றுலா துறை வளர்ச்சி அடைந்திருக்கிறது. இடாநகர் விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டப்பட்டு உள்ளது. வடகிழக்கின் 8 மாநிலங்களையும் அஷ்டலட்சுமியாக வழிபடுகிறேன்.
வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அந்த லட்சியத்தை எட்ட ஒவ்வொரு மாநிலமும் முன்னேற வேண்டும். தற்போது ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் சேமிப்பு திருவிழா தொடங்கி உள்ளது. இதனால் அருணாச்சல பிரதேச பெண்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.
உங்களது மாதாந்திர செலவு கணிசமாக குறையும். இந்த நேரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். ஒவ்வொரு கடைக்காரரும் சுதேசி பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அனைத்து ஒன்றிணைந்து சுதேசி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
வடகிழக்கு மக்களுக்கு பண்டிகை காலம் ஒரு போனஸாக அமைந்துள்ளது. அதோடு ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றொரு போனஸாக கிடைத்திருக்கிறது. எனவே ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் இரட்டை போனஸ் கிடைத்திருக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
திரிபுரா மாநிலத்தின் கோமதி மாவட்டம், உதய்பூரில் திரிபுர சுந்திர கோயில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றான இந்த கோயில் வளாகம் ரூ.52 கோடியில் புனரமைக்கப்பட்டு உள்ளது. புதுப்பிக்கப்பட்ட கோயில் வளாகத்தை பிரதமர் நரேந்திர நேற்று திறந்து வைத்தார். திரிபுர சுந்தரி கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடுகளை நடத்தினார்.