டாக்கா: வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளியில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 21) பயிற்சி விமானம் மோதியதில் 29 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க தீப்புண் மருத்துவ நிபுணர்களை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளது இந்தியா.
விமான விபத்தில் படுகாயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் டாக்காவில் உள்ள ஒன்பது மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இவர்களுக்கு உதவ இந்தியாவின் சிறந்த தீக்காய சிகிச்சை மருத்துவமனைகளான ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு தீக்காய நிபுணர்கள் மற்றும் ஒரு நர்சிங் உதவியாளர் நேற்று (புதன்கிழமை) டாக்கா சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவித்தார்.
இன்று (வியாழக்கிழமை) காலை முதல், தீக்காயமடைந்தோர் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் இந்தியாவின் மருத்துவக் குழு தனது பணியைத் தொடங்கும் என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த துயர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “டாக்காவில் நடந்த துயரமான விமான விபத்தில் இளம் மாணவர்கள் உட்பட பலர் உயிரிழந்ததில் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் இதயங்கள் அஞ்சலி செலுத்துகின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். இந்த நேரத்தில் இந்தியா வங்கதேசத்துக்கு ஆதரவாக நிற்கிறது. மேலும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம்.” என்று தெரிவித்திருந்தார்.