புதுடெல்லி: முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய (ஏஐஎம்பிஎல்பி) தேசிய செய்தித் தொடர்பாளர் எஸ்.க்யு.ஆர்.இலியாஸ் கூறியதாவது: வக்பு திருத்தச் சட்டம், 2025-ஐ முழுமையாக ரத்து செய்யக் கோருகிறோம். திருத்தப்பட்ட சட்டத்தின் சில விதிகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது, ஆனால் இந்த முடிவு முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.
முஸ்லிம் சமூகம், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை விதிகளுக்கு முரணான அனைத்து பிரிவுகளுக்கும் நீதிமன்றம் தடை விதிக்கும் என எதிர்பார்த்தோம். பகுதி நிவாரணம் வழங்கியிருந்தாலும், இந்த தீர்ப்பு முழுமையற்ற மற்றும் திருப்தி அளிக்காததாக உள்ளது. அரசியலமைப்புக்கு முரணான அனைத்து பிரிவுகளுக்கும் முழுமையான தடை விதிக்கப்படும் என்று முஸ்லிம் சமூகம் நம்பியது நடைபெறவில்லை.
வக்பு அங்கீகாரத்தை ரத்து செய்வது, வக்பு பத்திரத்தின் கட்டாயத் தேவை உள்ளிட்ட மீதமுள்ள விதிகள் இஸ்லாமிய சட்டங்களுக்கு முரணானவை. இந்தியா முழுவதும் உள்ள வக்பு நிறுவனங்களின் நேர்மையை அச்சுறுத்துவதாக உள்ளது. எனவே வக்பு திருத்த சட்டம், 2025-ஐ முழுமையாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, செப்டம்பர் 1 முதல் இரண்டாம் கட்டமாக நடைபெறும் வக்பு பாதுகாப்பு பிரச்சாரம் தொடரும் எனவும் ஏஐஎம்பிஎல்பி அறிவித்துள்ளது. இதில் போராட்டங்கள், பேரணிகள், பத்திரிகையாளர் சந்திப்புகள் மற்றும் மதங்களுக்கு இடையேயான கூட்டங்களும் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.