புதுடெல்லி: வக்பு சட்ட திருத்தத்துக்கு முழுவதுமாக இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசி அமர்வு விசாரித்து இடைக்கால தீர்ப்பை வழங்கி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
முகாந்திரம் எழவில்லை: இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த இடைக்கால தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஒட்டு மொத்த வக்பு சட்ட திருத்தத்துக்கும் தடை விதிக்கும் முகாந்திரம் எழவில்லை. இருப்பினும் சில விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
தற்போது பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் இடைக்காலத்துக்கானது என்பதைத் தெளிவுப்படுத்துகிறோம். வக்பு வாரியத்துக்கு சொத்துகளைத் தானமாக அளிக்கும் நபர் 5 ஆண்டுகள் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பதற்கான விதிகளை மாநில அரசுகளும் உருவாக்கும் வரை, இந்த விதிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
ஆக்கிரமிப்பு புகாருக்கு உள்ளாகும் வக்பு சொத்து மீது தீர்ப்பாயம் முடிவு எடுக்கும் வரை அதன் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ய வகைச் செய்யும் திருத்த பிரிவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வக்பு சொத்து அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு அளித்தால் அது அதிகார பிரிவினை கோட்பாட்டுக்கு எதிராக அமைந்துவிடும்.
மத்திய வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத இதர உறுப்பினர்கள் 4 பேருக்கு மேலும், மாநில வக்பு வாரியத்துக்கு நியமிக்கப்படும் 11 உறுப்பினர்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் 3 பேருக்கும் மேலும் இருக்கக் கூடாது. மாநில வக்பு வாரியத்துக்கு நியமிக்கப்படும் தலைமை நிர்வாக அதிகாரியான அலுவல்சார்பான உறுப்பினர் முஸ்லிம் அல்லாதவராக இருப்பார் என்ற விதிக்குத் தடை இல்லை.
முஸ்லிமை நியமிக்க முயற்சி: இருப்பினும் இவ்வாறு அலுவல்சார்பான உறுப்பினரான தலைமை செயல் அதிகாரி பதவிக்கு கூடுமான வரையில் முஸ்லிமை நியமிக்க முயற்சி செய்ய வேண்டும். வக்பு சொத்துகள் பல ஆண்டுகளாகப் பதிவு செய்யப்படுவதால், வக்பு சொத்துகளைப் பதிவு செய்ய வகைச் செய்யும் சட்ட திருத்தத்துக்குத் தடை விதிக்கத் தேவையில்லை.
தொல்லியல் சட்டம்: தொல்லியல் சட்டம் அனுமதிப்பதை கருத்தில் கொண்டு வக்பு சொத்துகளுக்கு தொல்லியல் நினைவுச்சின்ன அந்தஸ்து வழங்கும் பிரிவுக்குத் தடை இல்லை. இதுபோல, பழங்குடியினருக்கு சொந்தமான இடங்களை வக்பு சொத்துகளாக அறிவிக்கத் தடை செய்யும் சட்ட பிரிவுக்கு தடை இல்லை.
முஸ்லிம் அல்லாதோர் வக்புக்கு சொத்துகளைத் தானமாக வழங்கினால், முதலில் அறக்கட்டளைக்கு வழங்கி, பின்னர் வக்புக்கு சொத்துகளை அளிக்க முடியும். எனவே, முஸ்லிம் அல்லாதோர் சொத்துகளைத் தானமாக அளித்ததை அங்கீகரித்த வக்பு சட்ட பிரிவை ரத்து செய்வதை தடை விதிக்க முடியாது.
அரசுக்கு சொந்தமான ஏராளமான சொத்துகள் அனுபவத்திலுள்ள வக்பு சொத்துகள் என்ற பெயரில் ஆக்கிரமிப்பதை தடுக்க அனுபவத்திலுள்ள வக்பு சொத்து என்ற பிரிவை, திருத்த சட்டத்தில் மத்திய அரசு ரத்து செய்துள்ளதாகவும், இது பின்தேதியிட்டு நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளதால், அனுபவத்திலுள்ள வக்பு சொத்தை ரத்து செய்யும் சட்ட திருத்தம் தன்னிச்சையானது எனக் கூற முடியாது. இவ்வாறு இடைக்கால தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.