புதுடெல்லி: லாகூரில் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்பட்டுள்ளது என்று கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா அளித்து வரும் பதிலடி குறித்து இன்று (மே 8) செய்தியாளர்களிடம் விவரித்த கர்னல் சோபியா குரேஷி, “இன்று காலை இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை குறிவைத்தன. பாகிஸ்தானைப் போலவே இந்தியாவின் பதிலடியும் அதே தீவிரத்தில் உள்ளது. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பும் அழிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்பட்டுள்ளது.
மே 7-ல் அன்று நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ பதிலடி என்பது ஒருமுகப்படுத்தப்பட்ட, அளவிடப்பட்ட மற்றும் தீவிரப்படுத்தப்படாத ஒன்று. பாகிஸ்தான் ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் குறிவைக்கவில்லை. இந்தியாவின் ராணுவ இலக்குகள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பொருத்தமான பதிலடி கொடுக்கப்படும்.
மே 7 – மே 8 இரவு அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பட்டிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தரலாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது. இவை ஒருங்கிணைந்த எதிர் தடுப்பு அமைப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்கப்பட்டன. பாகிஸ்தானின் தாக்குதல்களை நிரூபிக்கும் இந்தத் தாக்குதல்களின் சிதைவுகள் தற்போது பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.