ஆக்ரா: ஆக்ராவைச் சேர்ந்த 33 வயது மற்றும் 18 வயதுடைய இரண்டு சகோதரிகள் காணாமல் போன வழக்கில் தொடங்கப்பட்ட விசாரணையில் அவர்கள் லவ் ஜிகாத் கும்பலால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜஸ்தானைச் சேர்ந்த முகமது அலி உள்ளிட்ட 10 பேர் உத்தர பிரதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மத மாற்றத்துக்காக அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து நிதி திரட்டியது தெரியவந்தது.
முகமது அலி மதம் மாறுவதற்கு முன்பாக இந்து மதத்தை சேர்ந்தவர். அவரது பெயர் பியூஷ் பன்வர். தற்போது ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மனம் திருந்தி குடும்பத்தினருடன் வசிக்க ஆசைப்படுவதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்லாத்தை விட்டு வெளியேறி மீண்டும் இந்து மதத்துக்கு மாற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஷனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ய இஸ்லாத்தை தழுவி தனது பெயரை முகமது அலி என மாற்றிக்கொண்டார். ஆனால், பியூஷின் காதலை ஷனா நிராகரித்து விட்டார்.
பின்னர், தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பில் சேர்ந்தார். அங்கு முகமது கவுஸுடன் சேர்ந்து சிறுமிகளை கட்டாய மதமாற்றம் செய்ததாக முகமது அலி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.