புதுடெல்லி: லடாக்கில் அரசு வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதி மேம்பாட்டு கவுன்சில்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது முதல் லடாக் மக்கள் தங்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலத்துக்கு அரசியல்சாசன பாதுகாப்பு கோரி போராடி வந்தனர்.
இந்நிலையில் அவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் புதிய இடஒதுக்கீடு, வசிப்பிட விதிகள் திருத்தம் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு தொர்பான அறிவிக்கைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
இதன்படி லடாக்கில் யூனியன் பிரதேச வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. லடாக்கில் 15 ஆண்டுகள் வசித்தவர்கள் அல்லது 7 ஆண்டுகள் படித்து 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு தகுதி பெறுவார்கள். மேலும் லடாக்கில் 10 ஆண்டுகள் பணியாற்றிய மத்திய அரசு ஊழியர்களின் வாரிசுகளும் இதற்கு தகுதி பெறுவார்கள். லடாக்கில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு 10% ஆக தொடர்கிறது.
லடாக்கில் தன்னாட்சி பெற்ற மலைப்பகுதி மேம்பாட்டு கவுன்சில்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் சுழற்சி அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசிதழ்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.