லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரி போராடிவந்த பருவநிலை செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் நேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு அவர் ஜோத்பூர் சிறைக்கு மாற்றப்பட்டதாக லடாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லடாக்கின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாங்சுக் லடாக்கின் பாதுகாப்பிற்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து கவனிக்கப்படுகிறது. அமைதியை விரும்பும் லடாக்கில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது முக்கியம். இதை உறுதி செய்வதற்கும், பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்கும், வாங்சுக் மேலும் பாதகமாகச் செயல்படுவதைத் தடுப்பது முக்கியம்.
எனவே குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, ஜோத்பூர் சிறைக்கு மாற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பொது நலனுக்காக, அவரை லே மாவட்டத்தில் வைத்திருப்பது நல்லதல்ல.
உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரக் குழுவின் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருந்தபோதிலும், வாங்சுக் மறைமுக நோக்கத்துடன் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். வாங்சுக்கின் தொடர் ஆத்திரமூட்டும் உரைகள், நேபாள கிளர்ச்சிகள், அரபு வசந்தம் போன்றவற்றைப் பற்றிய வீடியோக்கள் செப்டம்பர் 24 அன்று லேவில் வன்முறைப் போராட்டங்களுக்கு வழிவகுத்தன, அங்கு நிறுவனங்கள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் எரிக்கப்பட்டன.
இதன் விளைவாக, காவல்துறையினர் தாக்கப்பட்டனர், இதனால் நான்கு பேர் துரதிர்ஷ்டவசமாக இறந்தனர். அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டபோது, அவர் தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் விருப்பங்களை தாண்டி உண்ணாவிரதத்தை கைவிட்டிருந்தால் இந்த முழு சம்பவத்தையும் தவிர்த்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது.
நடந்தது என்ன? லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சுக் கடந்த 2 வாரங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லேயில் அங்குள்ள லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் கடந்த புதன்கிழமையன்று வன்முறையாக மாறியது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
தே.பா. சட்டத்தில் கைது: இந்நிலையில் நேற்று, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை லடாக் போலீஸார் கைது செய்தனர். சோனம் வாங்சுக்குக்கு சொந்தமான இமாலயன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேட்டிவ்ஸ் லடாக்(எச்ஐஏஎல்) என்ற பெயரிலான இன்ஸ்டிடியூட்டுக்கு வெளி நாடுகளில் இருந்து ரூ.1.5 கோடி நிதி முறைகேடான வழியில் வந்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் புகார் தெரிவித்துள்ளது. மேலும், சோனம் பாகிஸ்தான் சென்று வந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, நேற்று இரவு அவர் ஜோத்பூர் சிறைக்கு மாற்றப்பட்டதாக லடாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லடாக்கில் உள்ள பல மத, சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் வாங்சுக் கைது நடவடிக்கையை கண்டித்துள்ளன. அதேபோல, லே நகரில் ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது. மேலும், வாங்சுக்-க்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கார்கில் நகரில் நேற்று முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
தொடரும் ஊரடங்கு: இந்நிலையில், லே நகரில் 4-வது நாளாக இன்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தீவிர் அகண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சோனம் வாங்சுக்கின் கைதைத் தொடர்ந்து லடாக் பகுதியில் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.