லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் பிப்ராச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் குப்தா. 12-வது படித்து முடித்துள்ள இவர், மருத்துவப் படிப்பில் சேர உதவும் நீட் தேர்வுக்காக படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை தீபக் குப்தா, தனது வீட்டுக்கு வெளியே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் பிப்ராச்சி கிராமத்துக்கு ஒரு வாகனத்தில் வந்த ஒரு கும்பல் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளை அவிழ்த்து வாகனங்களில் ஏற்ற முயற்சித்தது. இவர்கள் கால்நடைகளை கடத்திச் சென்று விற்பனை செய்யும் கும்பல் எனத் தெரியவந்துள்ளது.
மாடுகளை அவிழ்க்கும் சத்தம் கேட்டு விழித்த தீபக் குப்தா உள்ளிட்ட சிலர், அந்த வாகனங்களை மடக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் தீபக் குப்தாவை தூக்கி வாகனத்தில் போட்டுக் கொண்டு தப்பினர்.
சிறிது தூரத்தில் தீபக் குப்தாவை கடுமையாக தலையில் தாக்கி சாலையில் வீசிவிட்டுச் சென்றனர். இதில் தீபக் குப்தா இறந்தார். மாடுகள் கடத்தப்படுவதைத் தடுக்க முயன்ற கூடுதல் போலீஸ் எஸ்.பி. ஜிதேந்திர ஸ்ரீவஸ்தவா, பிப்ராச்சி போலீஸ் நிலைய அதிகாரி புருஷோத்தம் உள்ளிட்டோரும் காயமடைந்தனர்.