புதுடெல்லி: இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் ரூ.75,000 கோடியில் 3 கப்பல் கட்டும் தளங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய துறைமுக அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் 3 கப்பல் கட்டும் தொகுப்புகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு பசுமைக்கள (கிரீன்பீல்டு) கப்பல் கட்டும் தொகுப்பும் ரூ.25,000 கோடியில் உருவாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், “கப்பல் கட்டும் தளங்களை உருவாக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் ஐந்து மாநிலங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. கப்பல் கட்டும் தளங்களின் ஒன்றில் ஒரு கப்பல் உடைக்கும் ஆலையும் உள்ளடங்கியிருக்கலாம்.
இது, கப்பல் கட்டு மானங்களுக்கான பொருட்களை வழங்க ஏதுவாக அமையும். இந்த கப்பல் கட்டும் தளங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை இறுதி செய்யும் பணியில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிபோக்குவரத்து அமைச்சகம் ஈடுபட்டுள்ளது” என்று தெரிவித்தன.
கடல்சார் தொலைநோக்கு 2030 திட்டத்தின்படி இந்தியாவை கப்பல் கட்டும் துறையில் முதல் 10 இடங்களுக்குள்ளும், 2047-க்குள் முதல் 5 இடங்களுக்குள்ளும் இடம்பெறச் செய்வதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக, துறை முகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழித்தடத்தில் ரூ.3.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.