புதுடெல்லி: ஒடிசா, பஞ்சாப், ஆந்திர மாநிலங்களில் ரூ.4,600 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் ஆலைகளை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் செமிகண்டக்டர்களை தயாரிப்பதற்கான சூழல் மேம்பட்டு வருகிறது. இதற்கான ஆறு அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் ஏற்கெனவே பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சிக்செம், காண்டினென்டல் டிவைஸ் இந்தியா (சிடிஐஎல்), 3டி கிளாஸ் சொல்யூஷன்ஸ் மற்றும் அட்வான்ஸ்டு சிஸ்டம் இன் பேக்கேஜ் (ஏஎஸ்ஐபி) டெக்னாலஜிஸ் ஆகிய நான்கு திட்டங்களுக்கான பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்த ஒப்புதல் அளிக்கப்பட்ட நான்கு திட்டங்களின் மதிப்பு சுமார் ரூ.4,600 கோடி ஆகும். இதன் மூலம் 2,034 திறமை வாய்ந்த நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் இது, இந்தியாவின் மின்னணு உற்பத்தி சூழல் அமைப்பை ஊக்குவிக்கும். இதன் காரணமாக மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த நான்கு திட்டங்களுடன் சேர்த்து செமிகண்டக்டர் தயாரிப்பதற்கான மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. 6 மாநிலங்களில் ரூ.1.60 லட்சம் கோடி முதலீட்டில் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொலைத்தொடர்பு, வாகனம், தரவு மையங்கள், நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் தொழில்துறை மின்னணுவியல் ஆகியவற்றில் செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் இந்த நான்கு புதிய திட்டங்கள் தற்சார்பு இந்தியாவை உருவாக்கவதற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிக்செம், 3டி கிளாஸ் நிறுவனங்கள் தங்களது ஆலைகளை ஒடிசாவில் அமைக்க உள்ளன. அதேபோன்று சிடிஐஎல் நிறுவனம் பஞ்சாபிலும், ஏஎஸ்ஐபி நிறுவனம் ஆந்திர பிரதேசத்திலும் செமிகண்டக்டர் ஆலைகளை அமைக்க உள்ளன.