ராய்ப்பூர்: சத்தீஸ்கர் அரசு நடத்தும் மதுக் கடைகளில் ரூ.3,200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று இருக்கிறது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் நேற்று கைது செய்யப்பட்டார்.
சத்தீஸ்கர் முழுவதும் 750-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மாநில அரசு நடத்தி வருகிறது. இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது மதுபானங்களை கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. இதன்பிறகு மதுபான ஊழல் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மாநில பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியது.
இதே ஊழல் விவகாரம் குறித்து அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல், அவரது மகன் சைதன்யா பாகேல், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் பலமுறை விசாரணை நடத்தி உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக சத்தீஸ்கரின் துர்க் மாவட்டம், பிலாய் நகரில் உள்ள முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் கைது செய்யப்பட்டார். இதன்பிறகு ராய்ப்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2019-ம் ஆண்டில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது ஆட்சியாளர்களின் அறிவுறுத்தலின்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில் துடேஜா, அன்றைய கலால் துறை தலைவர் திரிபாதி, தொழிலதிபர் அன்வர் தபேர் ஆகியோர் இணைந்து ரகசிய குழு ஒன்றை அமைத்தனர்.
இந்த குழு, மதுபான ஆலைகளிடம் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்ய கமிஷன் பெற்று அப்போதைய ஆட்சியாளர்களிடம் அளித்தது. இதன்படி 12 மது பாட்டில்கள் அடங்கிய ஒரு பெட்டிக்கு ரூ.75 முதல் ரூ.100 வரை கமிஷன் வசூல் செய்யப்பட்டது. மேலும் அரசு மதுபானக் கடைகளில் போலி ரசீதுகள், போலி மதுபானங்கள் மூலமும் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை சுமார் ரூ.3,200 கோடிக்கும் அதிகமாக ஊழல் நடைபெற்றிருக்கிறது. இதில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மகன் சைதன்யா பாகேலுக்கு மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்த வழக்கில் 29 அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கு தொடர்பாக சைதன்யா பாகேல் உட்பட இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறும்போது, “இன்று எனது மகனுக்கு பிறந்த நாள். ஏற்கெனவே திட்டமிட்டு பிறந்த நாளில் எனது மகனை கைது செய்துள்ளனர். சத்தீஸ்கரில் அதானி குழு நிலக்கரி சுரங்க திட்டத்துக்கு எதிராக எனது மகன் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றார். இதற்கு பழிவாங்கும் வகையில் அவரை கைது செய்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.