புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று பிஹார், மேற்குவங்கத்துக்கு செல்கிறார். அப்போது ரூ.12,200 கோடி வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கிவைக்கிறார்.
பிஹார் மாநிலம் மோதிஹரியில் இன்று காலை அரசு நலத்திட்ட விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அப்போது ரூ.7,200 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். சில திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
இதன்படி பிஹாரின் தர்பங்காவில் புதிய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவை அவர் திறந்து வைக்கிறார். 4 அம்ருத் பாரத் ரயில் சேவைகளை அவர் தொடங்கி வைக்கிறார். பல்வேறு சாலை, ரயில் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பிஹாரில் மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
சுமார் 61,500 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.400 கோடியை அவர் விடுவிப்பார். பிஹாரில் 12,000 ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. அந்பயனாளிகளிடம், புதிய வீடுகளின் சாவிகளை அவர் வழங்குவார். மேற்கு வங்கத்தின் துர்காபூரில் இன்று பிற்பகல் அரசு நலத்திட்ட விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அப்போது ரூ.5000 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். சில திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
இதன்படி மேற்குவங்கத்தின் பங்குரா மற்றும் புரூலியா மாவட்டத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்தின் சுமார் ரூ.1,950 கோடி மதிப்பிலான நகர எரிவாயு விநியோக (சிஜிடி) திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
துர்காபூர்-ஹால்டியா இயற்கை எரிவாயு குழாய் பாதையை அவர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இதன்மூலம் லட்சக்கணக்கான வீடுகளுக்கு இயற்கை எரிவாயு எளிதாக விநியோகம் செய்யப்படும். புரூலியா – கோட்ஷிலா இரட்டை ரயில் பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இது சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்கும்.